தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வன்னியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு: வேல்முருகன் வரவேற்பு - Velmurugan thanked Stalin for special quota for vanniyar

கல்வியில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்கதக்கது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

By

Published : Jul 27, 2021, 2:20 PM IST

சென்னை: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் வன்னியர் அமைப்புகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி சேர்க்கையில் சிறப்பு ஒதுக்கீடு ஒதுக்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’கடந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசிடம், வன்னியர் அமைப்புகள் பலமுறை கோரிக்கை விடுத்தன.

அப்போது கண்டுகொள்ளாத அதிமுக அரசு, பின்னாளில் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது.

தற்காலிக இட ஒதுக்கீடு

இதனிடையே, இந்த நடவடிக்கை தற்காலிகமானதுதான் என்றும் எடப்பாடி பழனிசாமி புது விளக்கம் ஒன்றை கொடுத்திருந்தார். இதனை உறுதி செய்யும் வகையில், 10.5விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டவர்கள் பேசியிருந்தனர்.

அதிமுக அரசு வழங்கிய வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு என்பது, சட்டப்பேரவை தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி அரசு நடத்தும் நாடகம். வன்னிய சமுதாயத்தை ஏமாற்றும் செயல் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அப்போதே குற்றம்சாட்டியிருந்தது.

மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை

பின்னர், திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம் பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்தேன்.

விக்ரவாண்டி இடைத்தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் உள்ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் உறுதியளித்திருந்தார். அதன்படி, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

சமூக நீதிக்கான அரசு திமுக

சீர் மரபினருக்கு 7 விழுக்காடு, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. இதன் மூலம் திமுக அரசானது சமூகநீதிக்கானது என்பது மீண்டும் நிருபணமாகிறது. முதலமைச்சருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சியின் போது, வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதவிகள், இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு செய்யப்பட்ட நிதியுதவி, பென்ஷன், வன்னியர் நல வாரியம் அமைக்கப்பட்டது. அவரது வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியிருப்பது இது கருணாநிதி ஆட்சி என்பதை உறுதிப்படுத்துகிறது.

கல்வி, வேலைவாய்ப்பில் 10.5% உள் இடஒதுக்கீடு வாயிலாக, வன்னியர் சமூக மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதார நிலையும் உயருவதற்கான வழி ஏற்பட்டுள்ளது. உள் ஒதுக்கீடு கோரி தொடர்ந்து குரல் கொடுத்து வரும் வன்னியர் அமைப்புகளுக்கும், அனைத்து வன்னிய தலைவர்களுக்கும் 10.5விழுக்காடு உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மீண்டும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வன்னியர் உள் ஒதுக்கீடு: காலையில் அறிக்கை; இரவு அரசாணை - மகிழ்ச்சியில் ராமதாஸ்!

ABOUT THE AUTHOR

...view details