சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"நடைபெற உள்ள நான்கு தொகுதிகள் சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் திமுகவிற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு வழங்கும். தேவை ஏற்பட்டால் நானும் அந்தத் தொகுதியில் பரப்புரை செய்யத் தயராக உள்ளேன் என்று தெரிவித்தேன். ஆனால் ஸ்டாலின் என் உடல்நலத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார். 22 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெற்று விரைவில் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பார் என்று நம்பிக்கை உள்ளது.
பாசிச மதவாத ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். ஊழல், லஞ்சம், லாவண்யம் இந்திய தேர்தல் ஆணையத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டுள்ள இந்த அரசு நீக்கப்பட வேண்டும்.
பொன்பரப்பி சம்பவத்தை பொறுத்தவரை குற்றம் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டும். ஆதி திராவிடர் மக்கள் மற்றும் வன்னியர்கள் என இரண்டு தரப்பிலும் யார் இந்த பிரச்னைக்கு காரணம் என்பதை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும்.
எங்கோ ஒரு சம்பவம் நடந்ததற்காக அப்பாவி மக்களின் வீடுகளை சேதப்படுத்துவதும், அப்பாவி வயதான பெண்களை தாக்குவது கண்டனத்துக்கு உரியது. அது போல் குறிப்பிட்ட ஒரு தரப்பில் யாரோ ஒருவர் செய்த தவறுக்கு, அவர் சார்ந்த ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குற்றம் சொல்லுவது ஏற்புடையது அல்ல. குற்றம் செய்த நபர் யார், அவர் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் என்பதைக் கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் நல்லிணக்கத்திற்காக நாம் அனைவரும் ஒன்று கூட வேண்டும்" என்றார்.
வேல்முருகன் செய்தியாளர்கள் சந்திப்பு