சென்னை:அரசு பணியாளர் திருத்த சட்ட முன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேறியது. இதன்படி தமிழகத்தில் அரசு வேலை பெறுவதற்கு தமிழ் தேர்வில் தேர்ச்சியடைவது கட்டாயம் ஆகும். இந்த சட்ட மசோதா ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பல்வேறு கட்சித் தலைவர்கள் பேசினர்.
இதில் பேசிய தமிழக வாழ்வுரிமைக்கட்சித் தலைவர் வேல்முருகன், வேல்முருகன், 'தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் அதிகம் வாழும் பகுதிகளில் அதிகாரத்தில் இருக்கும் உயர் அதிகாரிகள் இதுபோன்ற இடைச் செருகல்களை சேர்க்கிறார்கள் எனவும், தமிழர்களின் உரிமைகளை பறித்துக்கொண்டிருக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டினார். பூர்வீகக்குடி மக்களுக்கு தான் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். தமிழில் தேர்ச்சி பெற்றால் போதும் என்ற சட்டம் பேராபத்தை ஏற்படுத்தும் எனவும், இதனால் சட்ட திருத்தம் மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.
மேலும் பாமக எம்எல்ஏ ஜிகே மணி பேசுகையில், தமிழில் 6 ஆண்டுகாலம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற அம்சத்தை வரவேற்கிறேன் என்றார். மத்திய அரசின் ரயில்வே உள்ளிட்ட துறைகளில் வடமாநிலத்தவர்தான் இருக்கின்றனர். இவ்வாறு பணியில் இருப்பவர்கள், தமிழகத்திலும் இந்தி பேசுகிறார்கள் என்பதை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என கூறினார்.
இதே விவாதத்தில் பங்கேடுத்து பேசிய விசிக எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ் 'தமிழ்நாட்டில் தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் சட்டம் அமைந்தால் வரவேற்போம்' என கூறினார்.
எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய, 'பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இந்த சட்டம் இன்று நிறைவேற்றாவிட்டால், தமிழ் தேர்வு வேண்டாம் என்கிற நிலை வந்துவிடும். இன்றைய சூழலில் தமிழ் தேர்வு ரத்தாகிவிடக்கூடாது. எப்போது வேண்டுமானாலும், சட்டம் மாற்றப்படலாம் என உறுதியளித்தார். இதுகுறித்து பேசிய உறுப்பினர்களின் வேதனை, முதலமைச்சரிடம் எடுத்து செல்லப்படும். இன்றைய சூழலில் இந்த சட்டம் அவசியம்' என்றார். இதன் பின்னர் சட்டமுன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக பேரவை தலைவர் அப்பாவு அறிவித்தார்.