சென்னை:சென்னையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 14 வயது சிறுமி காணாமல் போனதாக, அவரது தாயார் கடந்த ஜூலை மாதம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல் துறையினர், தாயாரின் செல்போனை சிறுமி எடுத்துச் சென்றதை அறிந்துள்ளனர்.
இதனால் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசியதைத் தொடர்ந்து, சிறுமி மறுநாளே வீடு திரும்பி உள்ளார். இதனையடுத்து சிறுமியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது ‘கிளப்ஹவுஸ்’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்த சிறுமிக்கு, அதன் மூலமாக நண்பர்கள் பலர் கிடைத்துள்ளனர்.
தொடர்ந்து அந்த செயலியில் இருந்து கிடைத்த நட்புகள் மூலம் ‘ஸ்வீட்மீட்’ என்ற செயலியை தரவிறக்கம் செய்து சிறுமி பேசி வந்துள்ளார். இந்த ஸ்வீட்மீட் செயலியில்தான் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரிடம் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அந்த இளைஞர் சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் தாயார் திட்டியதால், வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, அந்த இளைஞர் உடன் செல்ல முடிவெடுத்துள்ளார். இதன் பேரில் சிறுமியை தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவெடுத்த இளைஞர், தனது தாயை சிறுமியுடன் அனுப்பி வைத்திருக்கிறார்.
ஆனால் அதற்குள்ளாகவே சிறுமியை காவல் துறையினர் தொடர்பு கொண்டதால், இளைஞரின் தாய் பயத்தில் சிறுமியை கூட்டிச் செல்லாமல் விட்டுவிட்டுச் சென்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இளைஞர் பயன்படுத்திய செல்போனை சோதனை செய்தபோது, அந்த எண் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தது என தெரிய வந்துள்ளது.