தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் பறக்கும் ரயில் பாலம் விபத்து; நிலநடுக்கம் போல் வீடுகள் அதிர்ந்ததாக மக்கள் தகவல்! - ரயில்வே மேம்பாலம் விபத்து

Railway Flyover Bridge Collapsed: சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் பணிகள் நடைபெற்று வந்த பறக்கும் ரயில்வே மேம்பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், நிலநடுக்கம் ஏற்பட்டது போல் வீடுகள் அதிர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Railway Flyover Bridge Collapsed
சென்னையில் பறக்கும் ரயில் பாலம் விபத்து

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2024, 2:32 PM IST

அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேட்டி

சென்னை: சென்னை வேளச்சேரியில் இருந்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வழியாக பரங்கிமலை ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், சுமார் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு பறக்கும் ரயில் திட்ட கட்டுமானப் பணிகள் நடந்து வந்தது. வேளச்சேரியில் இருந்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ரயில் நிலையம், ரயில் பாதை கட்டுமானப் பணிகள் இதுவரை கிட்டத்தட்ட 4.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில், ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் இருந்து 500 மீட்டர் தூரம் இணைக்கும் கட்டுமானப் பணிகள், நில பிரச்னைகளுக்குப் பின் கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது. மேலும், பரங்கிமலை ரயில் நிலையத்துடன் இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தில்லை கங்கா நகர் உள்வட்ட சாலையில் பறக்கும் ரயில் தூண்கள் இடையே பாலம் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியின்போது, இரு தூண்களுக்கு இடையே 40 மீட்டர் நீளம், 120 அடி கொண்ட படுக்கை போன்ற பாலத்தை இணைக்கும் பணி நடந்தது.

அப்போது ஒரு புறத்தில் தூணில் வைக்கப்பட்ட பாலம் திடீரென சரிந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக விபத்தின்போது அப்பகுதியில் யாரும் இல்லாததால், யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. இந்த பகுதியில் ரயில்வே பணிக்காக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருந்ததால், அதிர்ஷ்டவசமாக பாதிப்பில் இருந்து தப்பினர். பாலம் சரிந்து விழுந்த போது, பெரும் சத்தத்துடன் நில நடுக்கம் ஏற்பட்டது போல் உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அதனிடையே விபத்து நடந்த இடத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். பின்னர் பாலம் சரிந்து விழுந்தது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, மண்டல குழுத் தலைவர் என்.சந்திரன், ரயில்வே மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், "சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை, கடந்த 2007ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, இந்த பறக்கும் ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது, பரங்கிமலை வரை நீடிக்கப்படும் எனக் கூறி, ரூ.430 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என்றார்.

சுமார் 5 கிலோ மீட்டரில் 4.5 கிலோ மீட்டர் வரை 2011ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. மீதம் உள்ள பகுதியில் நில உரிமையாளர்கள் நீதிமன்றம் சென்றதால் 10 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, மார்ச் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இருந்தது. இந்த சூழ்நிலை 500 டன் பீம் பொருத்தும்போது கீழே விழுந்து விட்டது.

இரண்டு மாதங்களுக்குள் விபத்து சரிசெய்யப்பட்டு, பின்னர் ஜுன் மாதம் பணி முடிக்கப்படும். மக்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாதது மகிழ்ச்சி. துறை சார்ந்த அதிகாரிகள் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் ரயில்வே துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர். பாதுகாப்புடன் பணிகள் செய்ய மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.

தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தூண்களுக்கு இடையே பாலம் இணைக்கும் போது ஹைட்ராலிக் ஜாக்குகளைப் பயன்படுத்தி ஏவும் போது, கர்டர் ஒரு முனையில் தவறி கீழே விழுந்ததில் விபத்து நிகழ்ந்துள்ளது. எந்த ஒரு உயிர்ச்சேதமும் இல்லை.

பணிகள் நடைபெறும் முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால் இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இந்த பால சீரமைப்பு பணிகள் ஒரு மாதத்தில் முடிந்து பணிகள் மீண்டும் தொடங்கப்படும். விபத்து குறித்து விசாரணைக்குப் பிறகு துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2024 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு - திமுக அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details