சென்னை விமான நிலையத்தில் அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் சென்னை: விமான நிலைய கார் பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தாமல், வளாகத்திற்குள் நிறுத்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கும் நடைமுறையில் சென்னை விமான நிலைய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.250 கோடியில் 2.5 லட்சம் சதுர அடி பரப்பில், ஆறு அடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டு, கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதியில் இருந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. அதன் பின்பு இருசக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும், அந்த மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் தான் நிறுத்த வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இருப்பினும், பயணிகளை வழியனுப்ப, மற்றும் வரவேற்க வருபவர்கள், விமான நிலையத்திற்கு பல்வேறு பணிகள் நிமித்தமாக வரும் தனியார் ஏஜென்சி நிறுவன ஊழியர்கள் மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் நிறுத்தாமல், சென்னை சர்வதேச முனையம் வருகை பகுதி, புறப்பாடு பகுதி, அதைப்போல் உள்நாட்டு முனைய வருகை, புறப்பாடு பகுதிகள் என ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்வதாக கூறப்படுகிறது.
இதனால் சென்னை விமான நிலையத்தில், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன. இதைப் போன்ற போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அடுக்குமாடி கார் நிறுத்தம் ரூ.250 கோடியில் கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ளதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
போக்குவரத்து நெரிசல்: புதிய கார் நிறுத்தம் செயல்பாட்டிற்கு வந்து, சுமார் 10 மாதங்கள் ஆகியும கார் நிறுத்தத்தில், வாகனங்களை நிறுத்தாமல், போக்குவரத்துக்கு இடையூறாக வெளியிலேயே வாகனங்கள் தொடர்ந்து நிறுத்தப்படுவதாக கூறப்படுகின்றன. இதனால் விமான நிலைய வளாகத்திற்குள் தேவையில்லாத போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது.
பயணிகளின் வாகனங்கள் விரைந்து உள்ளே வர முடியாமல், அதைப்போல் வெளியில் செல்ல முடியாமல் கடும் நெரிசல்களில் வாகன ஓட்டிகள் சிக்கிக் கொள்கின்றனர். இந்நிலையில் பார்க்கிங்கில் நிறுத்தாமல், விமான நிலைய வளாகத்திற்குள் அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களை, பறிமுதல் செய்து அபராதம் விதிக்கும் நடவடிக்கையை நேற்று (செப் 25) சென்னை விமான நிலையம் தொடங்கி உள்ளது. இதற்காக தனியார் ஒப்பந்த நிறுவனத்தை பணிக்கு அமர்த்தி உள்ளனர்.
அபராதம்: தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள், விமான நிலைய வளாகத்திற்குள் ரோந்து வந்து அத்துமீறி நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை, ரெக்கவரி வேனில் ஏற்றி, பார்க்கிங் பகுதியில் கொண்டு சென்று ஒப்படைக்கின்றனர். அங்கு இருசக்கர வாகனங்களுக்கு ரூ.100, கார்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த அபராத தொகையை வசூலித்த பின்பு, வாகனம் விடுவிக்கப்படுகிறது.
மல்டி லெவல் ஆறு அடுக்கு கார் பார்க்கிங்கில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு, குறைந்தபட்ச கட்டணம் ரூ. 20ம், அதிகபட்சமாக 24 மணி நேரத்திற்கு ரூ.90 வசூலிக்கப்படுகிறது. அதைப்போல் கார்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.75ம், 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச கட்டணம் ரூ.500 வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:காவிரி விவகாரம்: பெங்களுருவில் முழு கடையடைப்பு.. 430 தமிழக பேருந்துகள் நிறுத்தம்.. பயணிகள் அவதி!