சென்னையில் கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் நேற்று (ஜுன் 5) வரை முழு ஊரடங்கானது பின்பற்றப்பட்டது. இந்த ஊரடங்கை மீறி அநாவசியமாக வெளியே சுற்றியதாக 88,360 வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த வாகனங்களை அந்தந்த காவல் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் ஊரடங்கு முடிந்த பிறகு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் இன்று பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் அந்தந்த காவல் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரியவர்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளனர்.
காவல் துறையினர் விதித்த அபராதத் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்திவிட்டு ஆதார் கார்டு, வாகன உரிம அட்டையை காண்பித்துவிட்டு வாகனங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.