தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 88,937 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் 10,813 பதற்றமானவை, 537 மிக பதற்றமானவை என காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில், 44,758 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக சென்னை காவல் துறைக்குள்பட்ட எல்லைகளில் 24 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 11,852 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தலை விட 4,000 வாக்குசாவடிகள் அதிகமாக அமைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில் 1,216 பதற்றமானது, 30 மிக பதற்றமாது என காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். டிஜிபி உத்தரவின்பேரில் தமிழ்நாடு முழுவதும் 21,289 ரவுடிகளை காவல் துறையினர் கைது செய்து, அதில் 732 ரவுடிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் 18,183 ரவுடிகள் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுத்துள்ளனர். குறிப்பாக சென்னையில் 42 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 251 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நடக்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வாய்ப்புள்ளதால் துணை ராணுவப் படையினர் காவல் துறையினருடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (மார்ச் 29) ஒரே நாளில் சைதாப்பேட்டையில் ரூ.3 கோடி, ஐஸ் ஹவுஸ் பகுதியில் ரூ.1.62 கோடி, கோட்டூர்புரத்தில் ரூ.7 லட்சம், அண்ணா நகரில் ரூ.48 லட்சம், தி நகரில் ரூ.12 லட்சம் மதிப்பிலான நகைகள், நுங்கம்பாக்கத்தில் 4 கிலோ நகைகள் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: ஒட்டன்சத்திரத்தில் 25 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்