ஊரடங்கு காரணமாக விவசாயிகளிடம் இருந்து விளை பொருள்களை நேரடியாக கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், அனிதா சுமந்த ஆகியோரின் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கு, மாநில அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "ஊரடங்கு அறிவித்ததும், தோட்டக்கலை துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விவசாயிகளிடம் இருந்து, காய்கறி, பழங்கள் அதிகளவில் கொள்முதல் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை, 10 ஆயிரத்து 100 வாகனங்கள் மூலம் 6 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது எனவும், உழவர் சந்தைகள் மூலம் ஆயிரத்து 400 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கோயம்பேடு சந்தை மூடப்பட்டதை தொடர்ந்து கோவை, காஞ்சிபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினமும் 500 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் கொள்முதல் செய்து, சென்னை நகர மக்களுக்கு விற்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.