சேலம்: திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காலை தந்தை வீரபாண்டி ஆறுமுகத்தின் படத்திற்கு மாலை அணிவிக்கும் தருவாயில், மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிவிழுந்து உயிரிழந்தார்.
இவரின் மறைவுக்குப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ”சேலத்துச் சிங்கம் வீரபாண்டியாரின் மகனும் - சேலம் மண்டலத்தில் கழகம் வளர்க்கும் வீரனாகவும் வலம்வந்தவர் வீரபாண்டி ராஜா.
அனைவரையும் ஈர்க்கும் பண்பு கொண்டவர்
இனிமையாய் பழகியும் அருமையான குணத்தாலும் அனைவரையும் ஈர்க்கும் பண்பு கொண்டவர் ராஜா. எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதனைத் திறம்படச் செய்து முடிக்கக் கூடியவர்.
இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர், மாவட்டச் செயலாளர், தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எனக் கழகப் பொறுப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டதோடு சட்டப்பேரவை உறுப்பினராகவும் திறம்பட மக்கள் பணியாற்றியவர் ராஜா.
இரண்டு நாள்களுக்கு முன்னால் சேலத்துக்கு அரசு விழாவுக்குச் சென்றிருந்தபோதுகூட வீரபாண்டி ராஜாவைச் சந்தித்தேன். அன்போடு பேசிக்கொண்டிருந்தேன். அந்த வெள்ளை உள்ளம் கொண்ட புன்சிரிப்பை மறக்க முடியவில்லை.