இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘நம் அன்னை என்ற அதிசய உலகம்!’ - அவர் காட்டிய பாதையில் கடமையாற்ற சூளுரைப்போம் - உலகத்திற்கே நிரூபிப்போம்!
இன்று (16.3.2020) அன்னையாரின் 42ஆவது நினைவு நாள் - இது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாளே தவிர, அவரை இயக்கத்தினர் அன்றாடம் நினைத்து - அவர்கள் விட்ட பணி முடிக்க எம்மை அர்ப்பணித்தே வாழ்ந்து வருகிறோம் என்பது மறுக்க இயலாத உண்மையல்லவா?
எங்கள் அன்னையார் - இல்லை இல்லை - நம் அன்னையார், ஓர் அதிசய உலகம்!
ஆம். எத்தனை வசவுகள் மலைபோல் குவிந்தன! அவைகளைக் கண்டு வெகுண்டெழாதவர்; அமைதியுடன் அத்தனையும், ‘விழுப்புண் தாங்கிய வீராங்கனை’யவர். அவற்றையெல்லாம் தாங்கித் தன்னை தனித் தன்மையான தலைவர் என்பதை அடக்கத்துடன் அறிவித்த அவரை ‘அதிசய உலகம்‘ என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லுவது?
இளமை என்பது இன்பத்தை இல்லற வாழ்வின் மூலம் வற்றாது அனுபவிப்பதே தம் வாழ்வியல் என்று மானுடம் கருதி வாழ்ந்து கொண்டிருக்கும் வையகத்தில், இளமையும், வளமையும் எம் இனங் காக்கும் தலைவரையும், அவர் தந்த இலட்சியங்களையும் முன்னெடுத்துச் செல்லுவதே எனத் தன்னலம் மறுத்த தொண்டறத் துறவியாக பணி செய்வதில் தான் எமக்கின்பம்; அந்த இன்பத்தை தம் அயராத உழைப்பில் - நோயுள்ள நிலையிலும் “ஓய்வற்று உழைப்பேன்” என்று குன்றா உறுதியுடன் இலட்சியப் பயணத்தில் பீடு நடை போட்ட எங்கள் அன்னையை, ஓர் அதிசய உலகம் என்று வாழ்த்தாமல் வேறு என்ன சொல்லி வாழ்த்துவது?
கொள்கைப் பாலை தானுண்டு, தந்தையின் கொள்கை - லட்சியப் பாலை மற்ற தொண்டருக்கும் பகிர்ந்தளித்து, களம் காணப் பயிற்சி தந்து - பாசறையாம் நம் இயக்கத்தைப் பாதுகாத்து - பாசப் பாலை வற்றாமல் வழங்கி - முற்றான தொண்டில் முகிழ்த்த எம் அன்னையாரை ஓர் அதிசய உலகம் என்ற அழைக்காமல் வேறு என்ன சொல்லி அழைப்பது?
எளிமையின் இலக்கணம்!
தன் பாதுகாப்புக்கென எமது தந்தை அளித்த ஒரே ஒரு சொத்தைக்கூட - தனது சொத்துக்களோடு இணைத்து ‘மக்கள் பணிக்கே’ என்று மரணப் படுக்கையிலும் எழுதி வைத்து, கொடையின் இமயமாய் - வள்ளற்றன்மையை வெளிச்சம் போட விருப்பமின்றி, தான் எப்படி தந்தை பெரியாரிடம் வந்து சேர்ந்தபோது - 1943இல் - அதே கைப்பையுடன் இறுதிப் பயணம் வரை வாழ்ந்த எளிமையின் இலக்கணமாம் எம் அன்னையாரை - இல்லை இல்லை நம் அன்னையாரை ஓர் அதிசய உலகம் என்று முழங்காமல் எப்படி நாங்கள் முழங்குவது?
தன்னையும் வென்று, தன்னை சந்தேக விமர்சனங்களோடு பார்த்த அனைவரையும் வென்று, நின்று காட்டி வெற்றி வாகை வீராங்கணையாம் எம் அன்னையாரை ஓர் அதிசய உலகம் என்று எழுதாமல் வேறு எப்படி எழுத முடியும்?
இதுவரை உலக அதிசயங்களைப் பற்றித்தான் நாங்கள் படித்திருக்கிறோம்; இப்போதோ நூற்றாண்டு விழாவில் நுண்மாண் நுழைபுலம் மிக்க அறிவார்ந்த எங்கள் அஞ்சாத நெஞ்சுரம் படைத்த வீராங்கனையே! நீங்கள் உலக அதிசயம் அல்ல; அதிசய உலகம், ஆம்! ஆம்! ஆம்! ஓர் அதிசய உலகம்!
அன்னையார் காட்டிய பாதையில் பயணிப்போம்! வரலாற்றில் தேடித் தேடிப் பார்க்கிறோம்; இங்கே உள்ள அதிசய உலகம் வேறு எங்கேயும் தென்படவில்லை.
விளம்பர வெளிச்சம் கூட உங்களை அண்ட நீங்கள் விட்டதே இல்லை! துறவையும் தூரத்தில் நிறுத்திய எங்கள் தூய்மையின் தாயே, தொண்டறத்தால், எங்களை செயற் பணித்தாயே, அப்படி செய்தே உங்கள் நினைவிடத்தில் செயல்களையே மலர்வளையமாய் வைத்து, நீங்கள் காட்டிய பாதையில் கடமையாற்ற சூளுரைப்போம்! இது உறுதியிலும் உறுதி! உறுதியாக ஏற்போம்! உலகத்திற்கு நிரூபிப்போம்!!