திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் 96ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
ஹிந்தி என்ற பாம்பின் நஞ்சை எடுக்க போராட்டம் நடக்கும் -கி. வீரமணி - DK
சென்னை: கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, ஹிந்தி என்ற பாம்பின் நஞ்சை எடுக்க ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடக்கும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னர் ஹிந்தி திணிப்பை எதிர்த்து தமிழ் மானம் காத்தவர் கருணாநிதி. அன்று தேவைப்பட்ட அதே உணர்வு மீண்டும் தற்போது தேவைப்படுகிறது. ஆட்சியில் அமர்ந்துள்ளோம் என்ற ஒரே காரணத்தினால் பிஜேபி காவிகளால் தமிழை பதம் பார்க்கும் அளவு ஹிந்திப் பாம்பு எட்டிப் பார்க்கிறது. அதன் நஞ்சைப் பிடுங்கி எரிய கருணாநிதி இல்லையே என்று யாரும் வருந்த வேண்டாம்.
கருணாநிதியால் செதுக்கப்பட்ட ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடக்கும். இது வெறும் அறிக்கைதான் என சிலர் சமாதானம் கூறி வருகின்றனர். ஆனால் 'வருமுன் காப்போம்' என்ற வள்ளுவரின் வழியிலே பெரியார் கொள்கையின்படி இன்று கருணாநிதியின் 96ஆவது பிறந்த நாள் அன்று நாம் சூளுரை ஏற்போம், தமிழ் மானம் காப்போம். திராவிடம் ஒரு போதும் மற்றவருக்கு சரணடையாது, இது பெரியார் மண் என்றும், அவரின் சொல் வெல்லும் சொல்' என்றும் பேசினார்.