சென்னை: நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் தன்னை மிரட்டுவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்ற படை கட்சியின் தலைவர் கி.வீரலட்சுமி புகார் மனு அளித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் தொடர்ந்து பாலியல் ரீதியான தாக்குதல் மற்றும் அச்சுறுத்தலுக்கு சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் தற்கொலை செய்து கொண்டு இறந்து போகிறார்கள். வருங்காலங்களில் இது போன்ற தற்கொலையில் யாரும் இறந்து விடக்கூடாது என்று நோக்கத்தோடு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சட்டப்பேரவையில் பாதுகாப்பு இருக்கிறது என்ற அடிப்படையிலும் நாங்கள் கூறியதால் விஜயலட்சுமி எங்களை நாடி உதவி கேட்டு வந்தார்கள்.
மேலும், விஜயலட்சுமி அவர்களை நாங்கள் மூன்று அடுக்கு பாதுகாப்பு கொடுத்து பாதுகாத்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து சமூகத்தை சேர்ந்த பெண்களும் ஆதரவு தெரிவித்து, காவல்துறை தரப்பில் என்ன தீர்ப்பு வரும் என்ற நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தற்பொழுது பிரச்சனை செய்து வருகிறார்.
சீமான், விஜயலட்சுமி அவர்களை திருமணம் செய்து அவர்களை கற்பழித்து ஏமாற்றிய காரணத்திற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதனைத்தொடர்ந்து, நேற்றைய தினத்தில் இரண்டாவது சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டில் மனுதாரர் காவல்துறைக்கு கொடுக்கப்பட்ட வாக்குமூலத்தை எப்படி காவல்துறையினர் எதிர் தரப்பினருக்கு காண்பிக்க முடியும்? அடிப்படை சட்டம் தெரியாமல் வாக்குமூலத்தை கொடுத்தால் தான் வருவேன் என்று கூறுகிறார் சீமான். அரசியல்வாதி, குற்றவாளி என யாராக இருந்தாலும் அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டம் தான்.