சென்னை: ஜெயலலிதாவின் வேதா நிலையம் நினைவில்லமாக மாற்றும் வகையில், கையகப்படுத்திய உத்தரவுகளை ரத்துசெய்ததை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல்செய்ய அதிமுகவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக முந்தைய அதிமுக அரசு, அறிவித்ததை ரத்துசெய்யக் கோரி ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சேஷசாயி, நினைவு இல்லம் அமைப்பதில் எந்தப் பொது பயன்பாடும் இல்லை என்றும், ஏற்கனவே நினைவிடம் உள்ள நிலையில் நினைவில்லம் அமைப்பது அரசு பணத்தை வீணடிக்கும் செயல் என்றும் கூறி, வேதா நிலையத்தை கையகப்படுத்திய நடவடிக்கைகளை ரத்துசெய்து நவம்பர் 24ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி, அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார். அதேபோல், உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்துசெய்யக் கோரியும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
வேதா நிலையம் கையகப்படுத்திய உத்தரவை ரத்துசெய்யப்பட்டதை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்ய அக்கறை காட்டாததால், அறக்கட்டளை உறுப்பினர் என்ற முறையில் மேல்முறையீடு செய்ய உரிமை உள்ளதாகவும், அதனால் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபத்தாயா, சத்திகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிமுக சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல்செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டனர். அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி. சண்முகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சோமையாஜி ஆஜராகி, தனி நீதிபதி வழக்கைத் தவறாக அணுகியுள்ளார் என்றும் பொதுமக்கள் பயன்பாடு என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும் நீதிமன்றம் அல்ல என்று குறிப்பிட்டார்.