விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று (மே.25) வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"மோடி அரசு கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த ஆறு மாதங்களாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள், மே 26ஆம் தேதியை கறுப்பு நாளாகக் கடைபிடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அதை ஏற்று தமிழ்நாடு முழுவதும் மே 26ஆம் தேதி அன்று தேசிய கறுப்பு நாளாகக் கடைபிடிப்போமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
எட்டாம் ஆண்டில் மோடி
2014ஆம் ஆண்டு மே 26ஆம் தேதிதான் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இப்போது அவர் அப்பதவியில் ஏழு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளில் அவரது ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன.
பணமதிப்பு அழிப்பு நடவடிக்கையின் மூலமாக ஏழை, எளிய மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளானார்கள். மழை வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களின்போதும்கூட மோடி அரசு உரிய விதத்தில் மக்களுக்கு உதவ முன்வரவில்லை. கிராமப்புற ஏழை, எளிய மக்கள் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கு உதவியாக இருக்கும் மகாத்மா காந்தி, தேசிய வேலை உறுதித் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டையும்கூட மோடி அரசு குறைத்துவிட்டது.
மாநிலங்களை யூனியன் பிரதேசமாக மாற்றும் மோடி
எஸ்சி-எஸ்டி, ஓபிசி பிரிவு மக்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டிய நிதியை ஒவ்வொரு ஆண்டாகக் குறைத்து அவர்களுடைய முன்னேற்றத்தைத் தடுத்து வருகிறது மோடி அரசு. எஸ்சி துணைத் திட்டத்தின்கீழ் பட்ஜெட்டில் 16.6 விழுக்காடு நிதி ஒதுக்குவதற்கு பதிலாக வெறும் 3.5 விழுக்காடு மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது. ஓபிசி பிரிவினரின் இட ஒதுக்கீட்டுக்கு பல்வேறு தடைகளை அரசாங்கத்தின் மூலமாகவும், நீதிமன்றங்களின் மூலமாகவும் மோடி அரசு ஏற்படுத்தி வருகிறது. அந்த அரசு கொண்டுவந்த 102ஆவது சட்டத் திருத்தத்தின் காரணமாக மாநில அரசுகள் பிற்படுத்தப்பட்ட பிரிவினரை அடையாளம் காண்பதும், இட ஒதுக்கீடு அளிப்பதும் இயலாது என்ற நிலை உருவாகியிருக்கிறது.