சென்னை:ஏப்ரல் 14ஆம் தேதி சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாள் என அறிவித்த முதலமைச்சரை சென்னை தலைமைச் செயலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் விசிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நான்கு பேரும் சந்தித்து நன்றியை தெரிவித்தனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஏப்.13) சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஏப்ரல் 14ஆம் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என அறிவித்திருக்கிறார்.
புரட்சியாளர் அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை செம்மைப் பதிப்பு எனும் பெயரில் நல்ல தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்படும் அம்பேத்கர் மணிமண்டபம் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருக்கிறது.
அதனை மறு சீரமைத்து அங்கே அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை அமைக்க வேண்டும். புத்தர் சிலையும் அமைக்க வேண்டும். அங்குள்ள நூலகங்களை சீரமைத்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை வைத்திருந்தோம்.
அதனடிப்படையில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார். அரசால் நடத்தப்படும் சமபந்தி போஜனம் என்பதை சமத்துவ விருந்து என மாற்றி அமைக்க வேண்டும் என்ற விடுதலை சிறுத்தைகளின் கோரிக்கையை ஏற்று இனி சமத்துவ விருந்தாக அரசால் நடத்தப்படும் என்ற அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
சமத்துவ நாயகராக இருந்து இந்த அரசை சமூகநீதி அரசாக நடத்தி செல்லும் முதலமைச்சருக்கு விடுதலை சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சராக இருந்தபோதே பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகாட்சி ஆகிய நான்கு ஊராட்சிகளுக்குத் தேர்தல் நடத்தாமல் கிடப்பில் போட்டு இருந்ததை கவனத்தில் கொண்டு அங்கிருந்த எதிர்ப்புகளை எல்லாம் சரிசெய்து, அந்த நான்கு ஊராட்சிகளுக்கும் தேர்தலை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலித் ஊராட்சி மன்றத் தலைவர்களை நாற்காலியில் அமர வைத்த பெருமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சேரும். அதனை வரவேற்று பாராட்டும் வகையில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதியை சமத்துவப் பெரியார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பாராட்டினோம்.
சமத்துவ நாயகர் என்று போற்றக் கூடிய வகையில் முதலமைச்சர் இந்த அறிவிப்புகளை செய்து வருகிறார். கோடான கோடி பூர்வகுடி உள்ளங்களில் மகிழ்ச்சியை நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை பிரதிபலிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள், முதலமைச்சரை சந்தித்து நன்றியை தெரிவித்தோம்” என்றார்.
இதையும் படிங்க:பாலிடெக்னிக் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!