இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "விவசாயிகளின் ஒப்புதலின்றி சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் விவசாயிகளின் பெயருக்கு மாற்றி, அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. எனவே தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் விவசாயிகளின் நிலத்தை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.
சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, நிலம் கையகப்படுத்த வேண்டுமென்றால் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குத் தடைவிதிக்க முடியாது என்று கூறிவிட்டது.
மத்திய அரசின் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு அரசுக்கு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் அதைச் செய்ய முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது.