இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், " பொன்பரப்பி வன்கொடுமையைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோரை மிரட்டும் தொனியில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அவர்கள் இருவரும் வன்னியர் சமூகத்தைப் பற்றிப் பேசாதவற்றையெல்லாம் பேசியதாகப் புனைந்துரைத்து, சாதிரீதியாக வன்முறையைத் தூண்டும் விதத்தில் அவரது அறிக்கை உள்ளது.
அவர் அறிக்கை வெளியிட்ட பிறகு, முத்தரசனுக்கு பாமக தரப்பிலிருந்து தொலைபேசியில் மிரட்டல்களும், ஆபாச வசைகளும் வந்த வண்ணம் உள்ளதாக அவர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இது மட்டுமின்றி வாக்குப்பதிவுக்கு முன்பு வாக்குச் சாவடிகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற விதத்தில் பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் பேசியதை தேர்தல் ஆணையம் பொருட்படுத்தி இருந்தால், பல இடங்களில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடும் நிலை ஏற்பட்டிருக்காது.
ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் பாமக தேர்தல் விதிகளுக்கு புறம்பாக வன்முறையைத் தூண்டி வருகிறது.
இப்படி சாதியின் பெயரால் வெளிப்படையாக வன்முறையைத் தூண்டும் ராமதாஸின் வெறுப்பு அரசியலுக்கு தமிழக அரசு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
மேலும், முத்தரசன், பேராயர் எஸ்றா சற்குணமுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.