சென்னை:மேகேதாட்டு அணை கட்ட முயற்சி செய்வதைத் தடுப்பது குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது.
இதில், மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுப்பதற்குச் சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தாமதமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.
கூட்டத்தில் பேசிய அவர், "பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னக அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு முதன்மை அமர்வு தடைவிதித்ததை ரத்துசெய்யக் கோரி வழக்குத் தொடுக்கப்பட வேண்டும்.
மேகேதாட்டு வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, அணை கட்ட நடவடிக்கை எடுத்துள்ள கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்படுவதோடு, கிடப்பில் இருக்கும் வழக்கைத் துரிதமாக விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .
காவிரி நீர் உரிமைப் பிரச்சினையில், தமிழ்நாடு ஒன்றுபட்டு நிற்கிறது என்பதைக் காட்டும் வகையிலும், ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தம் தருகிறவிதத்திலும் முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், பிரதமரை நேரில் சந்தித்து நமது நியாயத்தை வலியுறுத்த வேண்டும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை உறுப்பினர்களும், எதிர்வரும் மக்களவை கூட்டத் தொடரில் இது தொடர்பாகச் செய்ய வேண்டியவை என்ன என்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:மேகேதாட்டு அணை- முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது அனைத்து கட்சி கூட்டம்