சென்னை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், '' அன்பும், கருணையும் மக்களை இணைக்கும் வலிமை பெற்றவை. தனி மனித, உலக மனித அமைதியை அன்பு, கருணை கொண்டுதான் கட்டமைக்க முடியும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கூறிக்கொள்கிறேன்.
இந்த மண்னில் மதம், சாதி பெயர்களால் மக்களைக் கூறுபோடும் முயற்சிகள் அதிகார ஆட்சியில் இருப்பவர்களால் உருவாக்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் மிகவும் கொடியது. இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று கட்சிகள் மட்டுமில்லாமல், கட்சிகளை சாராதவர்களாலும் இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. சென்னையில் நாளை எழுத்தாளர்கள், கலைஞர்கள் கட்சி சார்பற்றவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவுள்ளனர். இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரான சட்டம் என்று கருத முடியாது. ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரான சட்டம். சட்டத்தைத் திரும்பபெறும் வரை அனைத்து ஜனநாயக சக்திகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது தேவையான ஒன்று.
குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டங்களை திசை திருப்புவதற்காக சிலர் வேண்டும் என்றே சர்ச்சையானக் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். மணியம்மையாரை கொச்சைப்படுத்த பாஜக-வின் ட்விட்டர் பக்கத்தில் மோசமானக் கருத்தை பதிவிட்டுள்ளனர். இதுவும் போராட்டத்தை திசை மாற்றத்தான் திட்டமிட்டு செய்கிறார்கள்.