சென்னை:இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர் பாபு, மாதவரம் பேருந்து நிலையத்தை இன்று (21) ஆய்வு மேற்கொண்டார். இப்பேருந்து நிலையமானது கோயம்பேட்டில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் பொருட்டு மாதவரத்தில் சென்னையிலிருந்து வடக்கு நோக்கி (ஆந்திரா, நெல்லூர், திருப்பதி மற்றும் காளஹஸ்தி (செங்குன்றம் வழியாக) செல்லும் பேருந்துகளுக்கான தனிப் பேருந்து நிலையம் ரூ.94.16 கோடி செலவில் 8 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு 10.10.2018 முதல் மக்கள் பயன்பாட்டிற்காக இயங்கி வருகிறது.
இப்பேருந்து நிலையத்தை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காகவும், மேலும் சிறப்பாக பராமரிப்பதற்காகவும் அமைச்சரால், ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது. இப்பேருந்து நிலையத்தை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொருட்டு கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும். வடக்கு நோக்கி செல்லும் பேருந்துகள் அனைத்தையும் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்க போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களுடன் கலந்தாலோசிக்க முடிவு செய்யப்பட்டது.
வடக்கு நோக்கி செல்லும் தனியார் பேருந்துகளையும் கோயம்பேட்டிலிருந்து, இப்பேருந்து நிலையத்திலிருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரப்பிரதேசம் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தங்கும் அறை போதுமானதாக இல்லாததால் கூடுதல் இடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆடவர் மற்றும் பெண்கள் பயணியர் தங்கும் கூடங்களை 2, 4 மற்றும் 6 பேர் தங்கும் அறைகளாக மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது.