தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வன்னியர் சங்க அலுவலகத்திற்கு சீல்.. பரங்கிமலையில் என்ன நடந்தது?

Chennai Vanniyar Sangam Building: அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து இயங்கி வந்ததாக வன்னியர் சங்க அலுவலக கட்டிடத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வருவாய்த் துறையினர் சீல் வைத்துள்ளதாக் குற்றம் சாட்டியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 18, 2023, 7:36 PM IST

சென்னை: புனித தோமையர் மலை (st thomas mount) அடிவாரம் அருகே உள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தில் வன்னியர் சங்கத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு புனித தோமையர் மலை அடிவாரத்தில் பட் ரோடு பகுதியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் நிலம் தமிழக அரசு இந்து அறநிலையத்துறைக்கு 10 வருட கால அவகாசத்திற்கு ஒத்திக்கு விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்து அறநிலைத்துறை ஒத்திக்கு விடப்பட்ட இடத்தை வன்னியர் சங்கத்தினர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கும் இந்து அறநிலையத்துறைக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்த காலம் முடிந்த நிலையில், வன்னியர் சங்கத்தினர் சட்டவிரோதமாக இந்த இடத்தில் நுழைந்து கடந்த 15 ஆண்டுகளாக ஆக்கிரமித்து இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நில விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டதாகவும், பல்வேறு நீதிமன்றங்களில் வன்னியர் சங்க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதரவாக உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் இன்று காலை வருவாய்த்துறை அதிகாரிகள் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலம் மற்றும் அதில் உள்ள கட்டிடம் என அனைத்திற்கும் சீல் வைத்து, இந்த இடம் அரசுக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகை வைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பாமகவினர் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீல் வைக்கப்பட்ட கட்டிடம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நூற்றுக்கணக்கான போலீசார் கட்டிடத்திற்கு முன்பு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். அப்போது முன்னாள் மத்திய இணை அமைச்சரும் பாமகவின் மூத்த நிர்வாகியுமான ஏ.கே.மூர்த்தி சம்பவ இடத்தில் காவல்துறையினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தைக்குப் பின் ஏ.கே.மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, "40 வருடங்களுக்கு முன்பாக தனி நபரிடமிருந்து வாங்கப்பட்ட இந்த நிலம் தொடர்ந்து வன்னியர் சங்கம் சார்பில் நிர்வகித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கி படிப்பதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இன்று திடீரென வருவாய்த் துறையினர் சீல் வைத்துள்ளனர்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த நிலத்திற்கு வருவாய்த்துறை, ராணுவம், இந்து அறநிலைத்துறை என மூன்று பிரிவினர் சொந்தம் கொண்டாடி வருவதாகவும், பல ஆண்டுகளாக நிலத்தை அனுபவித்த அடிப்படையில் வன்னியர் சங்கத்திற்கு இந்த நிலத்தை ஒத்திக்கு விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கான தொகையை எந்த துறையிடம் செலுத்த வேண்டும் என தெரிவித்தால் அதை செலுத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளின் கோரிக்கைக்கு ஏற்ப தற்போது பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் எந்தவித போராட்டத்திலும் ஈடுபடப் போவதில்லை எனவும் தெரிவித்த ஏ.கே.மூர்த்தி அங்கிருந்த கட்சி தொண்டர்களுடன் அமைதியாக கலைந்து சென்றார்.

இதையும் படிங்க: Idol theft: அமெரிக்காவில் 7ஆம் நூற்றாண்டு பல்லவர் காலத்து முருகன் சிலை கண்டுபிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details