கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த 10ஆம் தேதி தொடங்கி 34 வகையான சிறு, குறு தொழில் நிறுவனங்களை, நிபந்தனைகளின் அடிப்படையில் இயக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது.
இதனையடுத்து, நிபந்தனைகளுடன் சில வியாபாரங்கள் நடைபெற்று வந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் அந்நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பழ வியாபாரம் செய்து வந்தவர்களின் பழங்களை சாலைகளில் வீசியும், பழ வண்டிகளைக் கவிழ்த்தும், சாலையோர ஏழை வியாபாரிகளிடம் மோசமான முறையில், சிசில் தாமஸ் நடந்து கொண்டார். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் காணொலியாகப் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
தொடர்ந்து, திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி உள்ளிட்ட பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இக்காணொலியைப் பகிர்ந்து ஆணையரின் போக்கைக் கண்டித்து, நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தனர்.
சமூக வலைதளங்களில் வைரலாகி, பொது மக்களின் ஆதங்கத்திற்கு உள்ளான இந்தக் காணொலி குறித்து, ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தற்போது மாநில மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவர் துரை. ஜெயச்சந்திரன், உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் ஆகியோர், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளனர்.
மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் இவ்விவகாரத்தில் சட்டத்தைக் கையில் எடுத்து, பழ வியாபாரிகளிடம் காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொண்ட வாணியம்பாடி நகராட்சி ஆணையர் மீது, சட்டப்படி ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் நகராட்சி நிர்வாக ஆணையர் இன்னும் இரண்டு வாரங்களில், இது குறித்து நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் எனவும், நகராட்சி நிர்வாகம் இதனை செய்யத்தவறும் பட்சத்தில் மாநில மனித உரிமை ஆணையமே உரிய நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :மாநகராட்சி உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் - உயிரிழந்த மருத்துவர் சைமன் மனைவி வழக்கு!