சென்னை: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலைக்கு வருடந்தோறும் கார்த்திகை மாதத்தில் விரதம் இருந்து, பக்தர்கள் கோயிலுக்குச் செல்வது வழக்கம். அதிலும், இங்கு கேரள பக்தர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அந்த வகையில், இந்த வருடம் பக்தர்களின் கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமாக காணப்படுகிறது. இதனால், போக்குவரத்து, பாதுகாப்பு பணி ஆகியவற்றில் சபரிமலை தேவசம் நிர்வாகம் மற்றும் கேரள மாநில நிர்வாகம் சற்று திணறி வருகிறது. இந்த நிலையில், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சிறப்பு வந்தே பாரத் ரயில்களை தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோட்டயம் வரை செல்லும்.
இவ்வாறு வாராந்திர சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க உள்ள நிலையில், இதில் மொத்தம் 8 சேவைகள் வழங்கப்படுகிறது. இதன்படி 06151 என்ற எண் கொண்ட வந்தே பாரத் சிறப்பு ரயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டிசம்பர் 15, 17, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில், அதாவது வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினமே மாலை 4.15 மணிக்கு கோட்டயம் சென்றடையும்.