சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.
அப்போது பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியக்கருப்பன், "பெண்கள் அனைவருக்கும் பேருந்தில் இலவச பயணத்திட்டத்தை அரசு அறிவித்து நடைமுறையில் இருப்பதால், மானிய விலையில் இருசக்கர வாகன திட்டம் பெண்களுக்கு தேவைப்படவில்லை. அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட மானிய விலையிலான ஸ்கூட்டர் திட்டத்திற்கு வரவேற்பு இல்லை" என்றார்.
வானதி சீனிவாசன் கோரிக்கை
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், "கடந்த அதிமுக ஆட்சியில் உழைக்கும் மகளிருக்காக மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை நிறுத்தி உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
இது மகளிருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் யாரையும் சாராமல் சுயமாக முடிவு எடுப்பது அவர்களின் பணியை அவர்களே செய்வது என்பதில் முக்கிய அடிப்படையாக இருப்பது சொந்தமாக வாகனங்கள் வைத்துக்கொள்வது.