கோயம்புத்தூர்: பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில், “மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால் சென்னை நகரமே கடுமையான பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. ரூ.4000 கோடி பணிகளால் தான் பாதிப்பு குறைவு என மீண்டும் விளம்பரத்தில் இறங்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
கடந்த 2015ஆம் ஆண்டு 28 முதல் 34 சென்டிமீட்டர் மழை பெய்தது. தற்போது பெருங்குடியில் மிக அதிகமாக 45 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. ஆனால் சென்னை முழுவதும் பரவலாக 20 முதல் 30 சென்டிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டை விடப் பாதிப்பு அதிகம். அப்படி இருக்கையில் ரூ.4000 கோடி பணிகளால் தான் பாதிப்பு குறைவு எனக் கூறுவது எப்படி?
கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னையில் பெருமழை பெய்தபோதும் முந்தைய அரசைக் குறை கூறினார். தற்போதும் இதே பதிலைத் தான் கூறுகிறார். கடந்த 27 வருடத்திற்கு முன்னர் 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிங்காரச் சென்னை திட்டம் என்ன ஆனது. அதன் பின், கிட்டத்தட்ட 12 வருடங்கள் திமுக ஆட்சியிலிருந்தது. தற்போதும் ஆட்சியில் உள்ளது. இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்.
கடந்த 1967 ஆம் ஆண்டு கூவம் சுத்தம் செய்யப்போவதாகக் கூறி ஒரு திட்டத்தை அறிவித்தார் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி. சுத்தம் செய்யும் வேலை எப்போது நிறைவடையும் என்று சட்டசபையில் கேள்வி கேட்ட போது மூன்று நாட்கள் கழித்து அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கூவத்தில் சுத்தம் செய்யும் வேலையை நிறுத்தப்போவதாகக் கூறினார். அதற்குக் காரணமாக, கூவத்தில் முதலை இருக்கிறது எனக் கூறினார். திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட மூன்று கோடி முதற்கட்ட பணிக்கே செலவானது எனவும் கூறினார்.