தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Kalaignar Kottam: பகை வெல்லும் பட்டாளமாய்.. திருவாரூருக்கு திரண்டு வாருங்கள் என ஸ்டாலின் அழைப்பு! - madurai

திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத் திறப்பு விழாவில் திமுக தொண்டர்கள் திரளாக வந்துக் கலந்துக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Valluvar Kottam and Kalainar Kottam CM Stalin invites party cadres to thiruvarur
வள்ளுவர் கோட்டமும் கலைஞர் கோட்டமும் - திருவாரூக்கு திரண்டு வர கட்சியினருக்கு ஸ்டாலின் அழைப்பு

By

Published : Jun 18, 2023, 7:10 PM IST

சென்னை:திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்," நூற்றாண்டு நாயகர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை நாம் நினைக்காத நாளில்லை; எண்ணாத பொழுதில்லை. நெஞ்சம் அவரை நினைக்கும்போதும், அவரது பெயரை அடிமனதிலிருந்து உச்சரிக்கும்போதும் உடன்பிறப்புகளான உங்களுக்கும், உங்களில் ஒருவனான எனக்கும் உற்சாகம் பிறக்கிறது; உத்வேகம் கிடைக்கிறது.

தமிழர்களின் இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் பெயர் கருணாநிதி ! எதிரிகளின் நெஞ்சாங்கூட்டை இன்றளவும் அதிரவைக்கும் பெயரும் கருணாநிதி தான்! ஜனநாயக அறப்போர்க்களத்தில் வாள் ஆகவும், கேடயமாகவும் இருந்து நம்மையும், நம் உயிர்மூச்சான திமுகவையும் காத்து வருபவர் கருணாநிதி.

அவரை நாம் நினைக்க நினைக்க, எத்தகைய பகையும் வஞ்சகமும் சூழ்ச்சியும் எதிர்நிற்க முடியாமல் தெறித்து ஓடும். அத்தகைய மகத்தான தலைவரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடி மகிழ்கிறோம். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாப் பொதுக்கூட்டம் ஜூன் 7-ஆம் நாள், திமுக தொடங்கப்பட்ட வடசென்னையில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த தோழமைக் கட்சித் தலைவர்கள் கருணாநிதிக்கு உள்ளன்புடன் புகழ் வணக்கம் செலுத்தி, நாட்டைச் சீரழித்துவரும் ஜனநாயக விரோத - பாசிச சக்திகளை வீழ்த்துவதற்கு உறுதி ஏற்றார்கள். அதே உறுதியை, அந்தக் கூட்டத்தில் நிறைவுரையாற்றிய உங்களில் ஒருவனான நானும் ஏற்றுச் செயல்பட்டு வருகிறேன்.

'சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்' என்ற அரசியல் இலக்கணம் வகுத்துத் தந்த தலைவரல்லவா முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ! அதனால், சொல்லாக மட்டும் இல்லாமல் செயல் வடிவிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது அவரின் நூற்றாண்டு.

சென்னை கிண்டியில் 4.89 ஏக்கர் பரப்பளவில், 280 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கடந்த 2022 மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு, 6 தளங்களும் 1000 படுக்கைகளும் கொண்ட கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையை, 2023 ஜூன் 15-ஆம் நாள் மருத்துவர்கள் - செவிலியர்களுடன் இணைந்து உங்களில் ஒருவனான நான் திறந்து வைத்தேன்.

தான் வாழ்ந்த காலத்தில் தன்னுடைய பிறந்தநாளை எளிய மக்களுக்காக - விளிம்புநிலை மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த கருணாநிதியின் நூற்றாண்டில், அவர் பெயரில் ஏழை - எளியோர் உள்ளிட்ட அனைவரும் இதயம், சிறுநீரகம், மூளை நரம்பியல், குடல்-இரைப்பை உள்ளிட்டவற்றுக்கான சரியான சிகிச்சையை மேற்கொண்டு, உடல்நலன் காத்து, கருணாநிதி போலவே நீண்ட காலம் வாழ்ந்திடுவதற்கான திட்டம்தான், கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை. 15 மாதங்களில் இந்த மகத்தான சாதனையை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறது நமது 'திராவிட மாடல்' அரசு.

மதுரையில் எய்ம்ஸ்:அதே நேரத்தில், மதுரையில்….. உடன்பிறப்புகளுக்கு என்ன நினைவு வரும் என்பதை உங்களில் ஒருவனான நான் அறிவேன். நான் அதைச் சொல்ல வரவில்லை. எப்போதும் ஆக்கப்பூர்வமான செயல்களையே விரும்புகிறவன் நான். வீணாக்குவதை விரும்புவதில்லை. தமிழ் வளர்த்த மாநகராம் மதுரையில் கருணாநிதி நூற்றாண்டு நினைவாக அமைக்கப்பட்டு வரும் மிகப் பெரிய நூலகம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகத்தை சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் எனப் பெயரிட்டு அமைத்த கருணாநிதியின் நூற்றாண்டில் மதுரையில் அவர் பெயரிலான நூலகம் விரைவில் திறக்கப்பட்டு, இளைய தலைமுறைக்கான அறிவுக் கருவூலமாக செயல்படவிருக்கிறது.

ஓராண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் கருணாநிதி புகழ் போற்றும் பயனுள்ள திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்ற முனைப்புடன் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. பன்முக ஆற்றல் கொண்ட கருணாநிதி பிறந்தநாளை கொண்டாட அமைச்சர்கள் தலைமையில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு, பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களின் பங்கேற்புடனும், ஆலோசனைகளுடனும் நூற்றாண்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்காக, கழக உடன்பிறப்புகள் அனைவரையும் அழைப்பதற்காக உங்களில் ஒருவனான நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். 14 வயதில் தமிழ்க்கொடி ஏந்தி, இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடி, தனது சளைக்காத போராட்டத்தினால் இந்தியாவுக்கே வழிகாட்டும் மூத்த தலைவராக உயர்ந்து நின்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நமக்குத் தந்த திருவாரூரில், அவரது அன்னையார் - எனது பாட்டி அஞ்சுகம் அம்மையார் நினைவிடம் அமைந்துள்ள காட்டூர் பகுதியில் 7 ஆயிரம் சதுர அடியில், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது கலைஞர் கோட்டம்.

சென்னையில் வள்ளுவர் கோட்டத்தை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. தமிழர்களுக்காக மட்டுமின்றி, உலகில் வாழும் மனிதர்கள் அனைவருக்குமான அறநெறியை - வாழ்வியலை விளக்கும் திருக்குறளை நமக்கு வழங்கிய திருவள்ளுவருக்கு, தமிழ்நாட்டின் தலைநகரில் ஒரு கோட்டம் அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டு, அதனைத் திருவாரூர்த் தேர் வடிவில் மிகச் சிறப்பாக அமைத்துக் காட்டியவர் நம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

வள்ளுவர் கோட்டத்தில் உள்ள ஒவ்வொரு கல்லும் அவர் பார்வைபட்டபிறகே, சிற்பி கணபதி ஸ்தபதி குழுவினரின் உளிகளால் வடிக்கப்பட்டன. வள்ளுவர் கோட்டத்தின் தேர், அதில் உள்ள வள்ளுவர் சிலை, குறள் மணிமண்டபம், பிரமாண்ட கலையரங்கம், படிக்கட்டுகள், முகப்பு என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து அமைத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி . முழுமையடைந்த வள்ளுவர் கோட்டத்தைத் திறப்பதற்காக நாள் குறிக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சி முழுமையடையாதபடி எமர்ஜென்சி காலத்தில் கலைக்கப்பட்டது.

உங்களில் ஒருவனான நானும், என்னைப் போன்ற கழக உடன்பிறப்புகள் பலரும் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, ஓராண்டு காலம் சிறைவாசத்தையும், சித்ரவதைகளையும் அனுபவித்த காலம் அது. 1976 ஏப்ரல் 15ஆம் தேதி, வள்ளுவர் கோட்டத்தை, அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது திறந்து வைத்தார். வள்ளுவர் கோட்டத்தைத் தன் சிந்தனைக் கருவில் சுமந்து, வளர்த்து, செயல்திட்டமாக ஈன்றளித்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு திறப்பு விழாவிற்கான முறையான அழைப்பு இல்லை. அவருக்கு அதில் பங்கேற்கும் வாய்ப்பும் இல்லை.

ஆனால், அவர் எண்ணமெல்லாம் வள்ளுவர் மீதும் வள்ளுவர் கோட்டத்தின் மீதும்தான் இருந்தன. அந்தக் கோட்டத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள முரசொலி அலுவலகத்தில் உட்கார்ந்து, ‘கோட்டம் திறக்கப்படுகிறது - குறளோவியம் தீட்டப்படுகிறது’ என்று தன் ஆருயிர் உடன்பிறப்புகளுக்கு நீண்ட கடிதம் எழுதினார் கருணாநிதி . முரசொலியில் பொடிப்பொடி எழுத்துகளால் ஏறத்தாழ மூன்று பக்க அளவிற்கு வெளியான உணர்ச்சிமிகுந்த கடிதம் அது.

"கோட்டம் எப்படி அமைந்திட வேண்டும், வள்ளுவர் சிலை இருக்குமிடம் எப்படி அமைந்திட வேண்டும் என்பதற்கான ‘கோணல் மாணல்’ கோட்டுச் சித்திரங்களை நானே வரைந்து காட்டினேன்” என்று வள்ளுவர் கோட்டத்தின் வரைபடம் எப்படி உருவானது என்பதை அதில் விளக்கியிருப்பார் கருணாநிதி.அடிக்கல் நாட்டும் விழா இத்தனை இனிப்பாக - இனிமையானதாக இருந்த நிலையில், தனக்கு அழைப்பே இல்லாத வள்ளுவர் கோட்டத்தின் திறப்புவிழா நாளில் தன் மனநிலை எப்படி இருந்தது என்பதையும் கருணாநிதி தன் உடன்பிறப்புகளுக்கு விளக்கியிருக்கிறார்.

ஒரு தாயின் மனநிலையில் இருந்த தலைவரின் தவிப்பினைக் திமுக தொண்டர்கள் முழுமையாக உணர்ந்த காரணத்தினால்தான், 13 ஆண்டுகாலம் பலவித நெருக்கடிகளுக்கிடையே கருணாநிதி, திமுகவை கட்டிக்காத்த போது, அவருக்கு உற்ற துணையாக இருந்த தொண்டர்களின் உழைப்பினால் 1989-ஆம் ஆண்டு தி.மு.கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அப்போது அதே வள்ளுவர் கோட்டத்தில் பதவியேற்பு விழாவை நடத்தி, முதலமைச்சராக உறுதிமொழியேற்று, தன் சபதத்தை நிறைவேற்றினார் தலைவர் கருணாநிதி.

அவரது நெஞ்சமெல்லாம் நிறைந்த வள்ளுவர் கோட்டத்தைப் போலவே, அவரது திருவாரூரில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஓடாமல் இருந்த திருவாரூர் ஆழித்தேரை நவீனத் தொழில்நுட்பத்துடன் ஓடச்செய்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அந்தத் திருவாரூரில், தேர் போன்ற வடிவில் அவருக்குக் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டத்தில் அவரது திருவுருவச் சிலை, அவரது போராட்டமிக்க பொதுவாழ்வைச் சித்தரிக்கும் அருங்காட்சியகம், அவரது தந்தை - என் தாத்தா முத்துவேலரின் பெயரிலான நூலகம், இரண்டு திருமண மண்டபங்கள் ஆகியவை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

கருணாநிதி நூற்றாண்டு நிகழ்வுகளின் வரிசையில், சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு அடுத்ததாகத் திருவாரூரில் கோட்டம் திறப்பு விழா என்றுதான் திட்டமிட்டிருந்தோம். ஆனால் இடையிலே, கோவையிலும் கருணாநிதியின் புகழ் போற்றி, திமுகவின் வலிமையைக் காட்டும் வகையிலே தோழமைக் கட்சிகளுடன் இணைந்து களம் காணும் வகையில் எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டம், பெருந்திரளான மக்கள் பங்கேற்புடன் நடந்தேறியிருக்கிறது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நமக்கு ஊட்டியுள்ள இலட்சிய உணர்வினால், சோதனைகளையும் சாதனையாக்கும் வலிமையை தொண்டர்களாகிய ஒவ்வொருவரும் பெற்றிருக்கிறோம். அதிகார மிரட்டல்களுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம். மக்கள் நலன் காக்கவும் - மாநில உரிமைகளை மீட்கவும் கருணாநிதி வழியில் துணிந்து நடைபோடுவோம் என்பதுதான் கோவையில் நடந்த கண்டனக் கூட்டம் விடுத்துள்ள செய்தி.

குறுக்கே வரும் தடைகளைத் தகர்த்து நம் பயணம் தொடர்கிறது. வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறிப்பிட்டதுபோல, “சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல.” உறுதிமிக்க போராட்டத்தால் எதையும் சாதிப்போம். அந்த உணர்வுடன் கொள்கை வீரர்களாம் திமுக தொண்டர்களை ஜூன் 20 அன்று திருவாரூரில் திறக்கப்படவுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் திரண்டிட அழைக்கிறேன்.

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைக்கிறார். பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் முத்துவேலர் நூலகத்தைத் திறந்து வைக்கிறார். கருணாநிதியின் திருவுருவச் சிலையை, உங்களில் ஒருவனான நான் திறந்து வைக்கிறேன். தயாளு அம்மாள் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் மோகன் காமேசுவரன் வரவேற்புரையாற்றுகிறார். கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம், கலைமாமணி மாலதி லஷ்மண் குழுவினரின் பாட்டரங்கம் எனக் காலை முதல் மாலை வரை பல்வேறு நிகழ்வுகளால் கருணாநிதிக்கு திருவாரூரில் புகழ்மாலை சூட்டுகிறோம்.

கோட்டத்தின் திறப்புவிழாவில் உங்கள் திருமுகம் காணக் காத்திருக்கிறேன். பகை வெல்லும் பட்டாளமாய் - அறம் காக்கும் அணிவகுப்பாய் உடன்பிறப்புகளே திரண்டிடுவீர்! என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: Father's Day: தந்தையை போற்றிய தமிழ் படங்கள் ஓர் பார்வை!

ABOUT THE AUTHOR

...view details