சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில், ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளரான கோவை செல்வராஜ் சந்தித்தார்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கோவை செல்வராஜ், "அதிமுகவில் புதிய பதவிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் துணை ஒருங்கிணைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர், சட்டப்பேரவை உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒரே ஒரு எம்.பி.யும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ப.ரவீந்திரநாத் எம்.பி.யை, அதிமுகவின் உறுப்பினர் என மக்களவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுவிட்டார்.
அதிமுகவின் அந்தஸ்தை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். அவர் கடிதத்தை புறக்கணித்துவிட்டு, ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தை மக்களவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் இருவரும் சேர்ந்து நியமனம் செய்வதே அதிமுகவின் பட்டியல் ஆகும்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட ஒன்பது மாவட்டச் செயலாளர்களை நீக்கியுள்ளோம். அதில், திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சிறுணியம் பலராமன், கடலூர் வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத், கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச்செயலாளர் பாலகிருஷ்ண ரெட்டி, திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் உடுமலை ராதாகிருஷ்ணன்,
கோவை செல்வராஜ் செய்தியாளர் சந்திப்பு விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் கிருஷ்ண முரளி, தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் கடம்பூர் ராஜூ, வழக்கறிஞர் பிரிவு தலைவர் சேதுராமன் ஆகியோரை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நீக்கியுள்ளார்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:‘ஓபிஎஸ் ஆளில்லாத கடையில் டீ ஆற்றுகிறார்’ - ஜெயக்குமார் விமர்சனம்!