சென்னை:மாப்ளே லீப் புரொடக்சன்ஸ் & பல்ஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் இயக்குநர் கணேஷ் பாபு தயாரித்து இயக்கியுள்ள படம் கட்டில். இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது.
கட்டில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் கணேஷ் பாபு, கே.எஸ் ரவிக்குமார், மோகன் ராஜா, நடிகை சிருஷ்டி டாங்கே, இசையமைப்பாளர் ஸ்ரீ காந்த் தேவா, பாடலாசிரியர்கள் வைரமுத்து, மதன் கார்க்கி மற்றும் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் பாடலாசிரியர் வைரமுத்து பேசுகையில், ” கட்டில் போன்ற சிறு படங்கள் ஓடினால் தான் தமிழ் சினிமா செழிக்கும். சிறு படங்கள் தான் சிறகடித்துப் பறக்கிறது. சிறு படங்கள் வாழ்வியல் கொடுத்த கொடை. இன்றைக்கு வரும் சுவரொட்டிகளில் பெண்களுக்கு இடமிருக்கிறதா? என்றும் தமிழ் சினிமாவின் பொற்காலம் கடந்து போய் விட்டதாக கூறியவர், சிறிய படங்கள் வெற்றி பெற்றால் புத்தம் புதிய கலைஞர்கள், இயக்குநர்கள் கிடைப்பார்கள்.
தமிழ் சினிமா பெரிய படங்களுக்கு மத்தியில் சிறிய படங்களுக்கும் வழி விட வேண்டும். சிறிய படங்களும் கொண்டாடப்பட வேண்டும் எனவும், துப்பாக்கி சத்தத்துக்கு மத்தியில் நீங்கள் புல்லாங்குழல் வாசிக்க வந்துள்ளீர்கள் என இயக்குநரைப் பாராட்டினார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு மனிதன், தன் வாழ்நாளில் வெற்றி பெற வேண்டுமானால் யாருக்காவது தன்னை நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டும். கவியரசு கண்ணதாசனை எப்போதும் வெல்ல முடியாது என்று எனக்கு தெரியும். ஆயினும் கண்ணதாசனுக்கு என்னை நிரூபிக்க வேண்டும் என்று எழுதியது தான் அந்தி மழை பொழிகிறது பாடல்’.
மதன் கார்க்கியைக் கலாய்த்துப் புகழ்ந்து பேசியவர், எனக்குப் பின்னால் வந்து விடுவார் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. சில நேரங்களில் என்னைத் தாண்டுவதற்கான எல்லா முயற்சிகளையும் செய்கிறார். இது இயற்கை கொடுத்த கொடை. மதன் கார்க்கியைப் பின்பற்றாமல் நல்ல பாட்டு எழுதுபவர்களையும் கவனித்து கொண்டிருக்கிறேன்.
இந்த படத்தில் தேசிய விருது வரும் என்று தங்கள் ஆசையை சொன்னார்கள். இந்த படத்தின் பாடலுக்குத் தேசிய விருது கிடைத்தால் வைரமுத்துவை கழித்து விட்டு மதன் கார்க்கிக்கு கொடுக்க வேண்டும் என்று நானே பரிந்துரை செய்வேன். கட்டில் என்று சொன்னவுடன் பாலியல் மட்டுமே நினைவுக்கு வந்தால் நமக்கு மனக்கோளாறு என்று தான் நினைக்க வேண்டும். கட்டில் என்று சொல்வதில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது.
ஒரு தணிக்கை துறை, வெட்டி எறிந்த காட்சி ஒன்று வெளிநாட்டில் கொண்டாடப்பட்டதாக தகவல் என்று கூறியவர், நானெல்லாம் தணிக்கை துறையில் நிறைய வாதிட்டிருக்கிறேன். கட்டில் என்ற டைட்டிலை தவறாக நினைக்க வேண்டாம்” என்றும் கூறினார்.
இதையும் படிங்க:அதிமுக கொடி, சின்னத்தைப் பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை!