தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

6 தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்தில் போட்டி; வரும் காலத்தில் சுழலுமா வைகோவின் பம்பரம்? - மதிமுகவின் தேர்தல் வரலாறு

திமுகவை விட்டு எம்ஜிஆர் பிரிந்தபோதுகூட ஏற்படாத விளைவுகளை, வைகோவின் பிரிவு ஏற்படுத்தியது. இத்தகைய பலம்பொருந்திய வைகோ தற்போது மெல்ல மெல்ல தனது பலத்தை இழந்து ஓரம்கட்டப்படுகிறாரா என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழுந்து வருகிறது.

Vaikos MDMK Will survive in politics
Vaikos MDMK Will survive in politics

By

Published : Mar 10, 2021, 6:25 AM IST

சென்னை:தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்டு வரும் அதிமுக, திமுக ஆகிய திராவிட கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பினும், இவ்விரு கட்சிகளும் தேர்தலை கூட்டணி கட்சிகளின் உதவியுடனே களம் காணுகின்றன.

இதனால், அரசியல் விமர்சகர்களும், மக்களும் இந்தப் பிரதான கட்சிகள் பிற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்களையும், தொகுதிகளையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இவை ஓரளவிற்கேனும் இந்தப் பிரதான கட்சிகளின் வாக்கு விகிதத்தை தீர்மானிப்பதாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடத்தில் உள்ளது.

அந்தவகையில், தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான சமயத்திலேயே தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று முழங்கிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, தற்போது திமுக கூட்டணியில் ஆறு தொகுதிகளைப் பெற்றதுடன், திமுக சின்னத்தில் போட்டியிடுவதற்கும் சம்மதித்துள்ளார்.

திமுகவுடனான தொகுதி பங்கீடு

சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். கடந்த நாடாளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக தனது கட்சிக்கான தனிச் சின்னத்தில் மதிமுக போட்டியிடாமல் தவிர்த்திருப்பது அந்தக் கட்சி வளர்ச்சியின்றி தேய்ந்து வருவதுடன் அதன் எதிர்காலம் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

மாநில கட்சி என்ற தகுதியை மதிமுக இழந்ததால், அதன் பம்பரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளது. எனவே திமுகவின் அழுத்தம் காரணமாக, உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடுகிறது. தனி சின்னத்தில் போட்டியிடுவதில் உள்ள சிக்கல்களை மனதிற்கொண்டு இந்த முடிவினை மதிமுக ஏற்றுக் கொண்டுள்ள போதிலும், இதனால் பிற்காலத்தில் மதிமுகவின் நிலை கவலைக்குரியதாகவே அமையும்.

மதிமுக சின்னம்- பம்பரம்

மதிமுகவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றிபெற்றாலும் அவர்கள் சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள். அவர்கள் தங்களின் கருத்துகளை சட்டப்பேரவையில் சுதந்திரமாக தெரிவிப்பதிலும் சிக்கல் ஏற்படும். இதனால் மதிமுகவின் பம்பரம் வரும் காலத்திலும் சுழலுமா என்பது கேள்விக்குறியாகவே அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஓரடி முன்னால் ஈரடி பின்னால்: மதிமுகவின் தேர்தல் வரலாறு

வைகோ என்ற தலைவரை முன்னிறுத்தி, 1994ஆம் ஆண்டு மதிமுக தொடங்கப்பட்டபோது திமுகவின் ஒன்பது மாவட்ட செயளாளர்கள் அவருக்கு ஆதரவாக நின்றனர். மதிமுக முதன் முதலாக 1996 சட்டப்பேரவை தேர்தல் களத்தில் ஜனதாதளம், சிபிஎம், உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்து தோல்வியையே தழுவியது. தான் சந்தித்த முதல் தேர்தலில், விளாத்திகுளம், சிவகாசி என இரண்டு தொகுதிகளிலும் வைகோ தோல்வி அடைந்தார். இருப்பினும், திமுக தலைமைக்கு எம்ஜிஆர் பிரிந்தபோதுகூட ஏற்படாத நெருக்கடியை மதிமுக அளித்ததில் மாற்றுக் கருத்தில்லை.

திமுகவினருடன் வைகோ

பின்னர், நடைபெற்ற சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிமுக அல்லது திமுக தலைமையிலான கூட்டணிகளில் அங்கம் வகித்து போட்டியிட்டது. 1999ஆம் ஆண்டு திமுக-பாஜக கூட்டணியில் நான்கு நாடளுமன்றத் தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றது. இதனால் மதிமுகவின் செஞ்சி ந. ராமசந்திரன் வாஜ்பாய் அமைச்சரைவையில் நிதித்துறை இணை அமைச்சரானார்.

பின்னர், 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக உடன் தொகுதி உடன்பாடு எட்டப்படாதால், கூட்டணியில் இருந்து வெளியேறி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு தோல்வியடைந்தது. ஆனால், அந்தத் தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்க மதிமுக வாக்குகளை பிரித்ததே காரணம் என அரசியல் விமர்சகர்களால் கருதப்பட்டது.

2004 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மதிமுக நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அடுத்து 2006 தேர்தலில் அதிமுக கூட்டணியில் 35 தொகுதிகளில் போட்டியிட்டு ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஈழப்போரின் பின்னனியில் நடைபெற்ற 2009 நாடளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு ஈரோடு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. ஆனால், 2011 சட்டப்பேரவைக் தேர்தலில், கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதுடன் தேர்தலை புறக்கணித்தார் வைகோ.

2014 நாடளுமன்ற தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று, வைகோ 15 ஆண்டுகளுக்குப் பிறகு விருதுநகரில் போட்டியிட்டார். வைகோ உள்ளிட்ட ஏழு மதிமுக வேட்பாளர்களும் தோல்வியை சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கினர். இந்த கூட்டணியும் அனைத்து தொகுதியிலும் தோல்வியை சந்தித்தது.

இந்த மெகா தோல்விக்குப் பிறகு 2019 நாடளுமன்றத் தேர்தலில் மதிமுக , திமுகவுடன் கூட்டணி அமைத்தது. அப்போது, திமுக சின்னத்தில் நின்ற மதிமுகவின் கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். தேர்தல் உடன்படிக்கையின் படி, வைகோ மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கட்சியின் பின்னடைவுக்கு காரணம் என்ன? தலைமையா? தேர்தல் யுக்திகளா?

மூத்தப் பத்திரிகையாளர் மூராரி கூறும்போது, "மதிமுக, உதயசூரியன் சின்னத்தில் நிற்பதை மேலோட்டமாகப் பார்த்தால் அது ஒரு பின்னடைவுதான். மதிமுகவிற்கு 10 ஆண்டுகளாக சின்னம் இல்லை என்பதால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளனர். சின்னம் என்பது அந்தக் கட்சிக்கு தனி அடையாளமாகும். ஆனால் மதிமுக திமுகவில் இருந்து பிரிந்தக் கட்சிதான். எனவே அதில் எந்த பாதிப்பும் கிடையாது.

மதிமுக குறித்து மூத்த பத்திரிகையாளர் கருத்து

தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் எனப் பார்த்தால் மதிமுக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் பெறும் வாக்குகள் அனைத்தும் திமுகவிற்குத்தான் செல்லும். இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் செல்ல முடியாது, மதவாத கட்சியான பாஜகவுடனும் செல்ல முடியாது என்ற அடிப்படையில் தான் ஆறு இடங்கள் கிடைத்தாலும் பரவாயில்லை என திமுக கூட்டணிக்குச் சென்றுள்ளனர். இதே அடிப்படையில் தான் விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் ஆகியன அதிருப்தி இருந்தாலும் திமுக கூட்டணியில் உள்ளன.

திமுக 180 இடங்களில் போட்டியிட்டு, குறைந்தது 150 இடங்களாவது வெற்றிப் பெற வேண்டும். ஏனெனில் ஆட்சிக்கு வந்தப்பின்னர் பாஜக ஆட்சியை கவிழ்ப்பதற்கு வாய்ப்புள்ளது. எனவே திமுக கூடுதல் இடங்களில் போட்டியிட்டு, கூட்டணி கட்சிகளுக்கு குறைவான இடங்களை வழங்குகிறது. பிற மாநிலங்களில் பாஜகவின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டே திமுக இந்த முடிவினை எடுத்துள்ளது" என்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details