இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு மின்அஞ்சல் வழியாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதி மீனவர்களுக்கு வேதனை அளிக்கும் செய்தியைத் தங்கள் உடனடிக் கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன்.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கைக் கடற்படை அத்துமீறி வந்து, தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தி 600-க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொன்றது. நூற்றுக்கணக்கானோரைப் பிடித்துக்கொண்டு போய் இலங்கைச் சிறைகளில் அடைத்தனர். அவர்களது படகுகளைப் பறிமுதல்செய்தனர்.
ஒவ்வொரு மீன்பிடிப் படகும் 25 முதல் 40 லட்சம் பெறுமதியானவை. தமிழ்நாட்டு மீனவர்கள் கடன் வாங்கி, அதற்காக வட்டி கட்டிவருகின்றார்கள். அந்தப் படகுகள்தான் அவர்களது வாழ்வாதாரம்.