தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை -2020 திரும்ப பெற வைகோ வலியுறுத்தல்! - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

சென்னை : சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை -2020 திருத்தங்களை மத்திய அரசு உடனே திருப்பப் பெற வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை -2020 திரும்ப பெற வைகோ வலியுறுத்தல்!
சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை -2020 திரும்ப பெற வைகோ வலியுறுத்தல்!

By

Published : May 10, 2020, 9:44 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ ‘சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை விதிகள் -2020’ என்று வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள திருத்தங்கள், வளர்ச்சியின் பெயரால் அழிவுப் பாதைக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் இருக்கின்றன.

அவற்றில் மூன்று முக்கியத் திருத்தங்கள் மத்திய அரசுக்கு எதேச்சதிகாரமான அதிகாரங்களை அளிக்கின்றன. முதலாவதாக, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை முன்வைக்காமலும், மக்களிடம் கருத்துக் கேட்காமலும் நடைமுறையில் செயல்பாட்டில் உள்ள புதிய திட்டங்கள், பழைய திட்டங்களின் விரிவாக்கங்கள் கட்டுமானப் பணிகள் இவற்றை எவ்வித தடையுமின்றி தொடரலாம். அரசுக்கு தண்டத் தொகை செலுத்தினால் போதும் அனுமதி கிடைத்துவிடும்.

இரண்டாவதாக, 70 மீட்டர் வரையிலும் சாலைகளை அகலப்படுத்துதல், விரிவாக்கத் திட்டங்கள், நீராதாரக் கட்டமைப்புகள், பெரும் கட்டுமானத் திட்டங்கள் போன்ற 14 வகையான பணிகளுக்கும், சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைப்பவை என்று கருதப்படக்கூடிய திட்டங்களுக்கும் இனி சுற்றுச் சூழல் மதிப்பீட்டு அறிக்கை முன் வைக்கத் தேவை இல்லை.

சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் முன் அனுமதி தேவை இல்லை. மூன்றாவதாக சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி மண்டலங்கள், தோல் தொழில் மற்றும் கடலோரத் தொழில் மண்டலங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் கட்டுமானத்திட்டங்கள் பற்றியும் விரிவாக்கப் பணிகளுக்கும் சுற்றுச் சூழல் அனுமதி தேவை இல்லை.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்த விதிகளின்படி, சுற்றுச் சூழலுக்குக் கேடு பயக்கும் திட்டங்கள் குறித்து சூழலியல் ஆர்வலர்கள், பொதுமக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் என, எவரும் புகார் கூறுவோ, கருத்துத் தெரிவிக்கவோ முடியாது. எனவே, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை -2020 திருத்தங்களை மத்திய அரசு உடனே திருப்பப் பெற வேண்டும்.

இந்த வரைவு அறிக்கையை ஏற்கவே முடியாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்க வேண்டும்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...கரோனா தடுப்பு ஆராய்ச்சியில் ஈடுபடும் மதுரை காமராஜர் பல்கலைக்கழைகம்!

ABOUT THE AUTHOR

...view details