இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகும் '800' என்ற படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கும் இப்படத்தை டார் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். சிங்கள அரசுக்கும், ராஜபக்சே அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை ஏற்க முடியாது எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விஜய் சேதுபதி இப்படத்தில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டுமென அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழ் ஈழத்தில் லட்சோப லட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு, ஈழப்போர் முடிவடைந்து விட்டது என்று கொலைகாரன் ராஜபக்சே அறிவித்தபோது, ’இந்த நாள் இனிய நாள்’ என்று கூறியவர் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்.
”முத்தையா முரளிதரனாக நடிப்பதை விஜய் சேதுபதி தவிர்க்க வேண்டும்” - வைகோ - விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு
சென்னை : தமிழின துரோகி முத்தையா முரளிதரனாக நடிப்பதை விஜய் சேதுபதி தவிர்க்க வேண்டுமென வைகோ தெரிவித்துள்ளார்.
”ஆயிரக்கணக்கான பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டு காணாமல் போன எங்கள் ரத்த உறவுகளை தேடிக் கண்டுபிடித்துத் தாருங்கள்” என்று தமிழ் ஈழத் தாய்மார்கள் பட்டினிப் போராட்டம் நடத்தியபோது, அதை நாடகம் என்று இகழ்ந்து பேசியவர்தான் முரளிதரன்.
பிறப்பால் தமிழனாகவும், வளர்ப்பால் சிங்களவன் எடுப்பார் கைப்பிள்ளையாகவும் மாறிப்போன முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை திரைப்படமாக்க சிங்கள திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் முயற்சி எடுத்து, அந்தப் படத்திற்கு '800' என்று பெயர் சூட்டி இருக்கிறது.
தமிழினத்தின் துரோகி என்று உலகத் தமிழர்களால் அடையாளம் காணப்பட்டுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை சித்தரிக்கும் '800' திரைப்படத்தில், முரளிதரனாக தமிழ்நாட்டின் தலைசிறந்த திரைக் கலைஞர் என்ற பெயரை எடுத்துள்ள விஜய் சேதுபதி நடிக்கப் போகிறார் என்ற செய்தி தமிழர்தம் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டுகிறது.
ஒன்றரை லட்சம் தமிழர்கள் ரத்தத் தடாகத்தில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டபோது, 90 ஆயிரம் தமிழ் பெண்கள் விதவைகளாகி கதறி அழுதபோது பரிகாசம் செய்த இன துரோகி முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி திரைப்படத்தில்நடித்தார் என்கிற தீராத அவப்பழிக்கு அவர் ஆளாகிவிடக் கூடாது. எனவே '800' திரைப்படத்தில் நடிப்பதை விஜய் சேதுபதி தவிர்க்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.