இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கை (EIA) என்பது புதிதாகத் தொடங்கப்பட இருக்கும் தொழில்கள், திட்டங்கள், அவற்றின் கட்டமைப்புகள் ஆகியவற்றால் ஏற்படும் தாக்கங்களையும், விளைவுகளையும் முன்னறிவிக்கும் ஆய்வு அறிக்கையாகும்.
நடைமுறையில் உள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கை தொடர்பான விதிமுறைகள், 2006ஆம் ஆண்டில் சில திருத்தங்களைச் செய்து (எஸ்.ஓ. 1119(இ)2020) கடந்த மார்ச் 23ஆம் தேதி ஒரு வரைவு அறிக்கையை மத்திய அரசு தயாரித்து, ஏப்ரல் 11ஆம் தேதி அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.
மேற்கண்ட வரைவு அறிக்கை அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாள்களுக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம். மாநில அரசுகள் தங்களது கருத்துகளை அளிக்கலாம் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கூறியிருந்தது. கரோனா பாதிப்பால் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மீதான மக்கள் கருத்தினைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. முதலாவதாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை இல்லாமலே ஒரு திட்டத்தைத் தொடங்கவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் அனுமதியளிக்கிறது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையின்றி தொடங்கப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் திட்டங்கள் குறித்து பிறகு ஒரு குழு போடப்பட்டு ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட், சுற்றுச்சூழல் குறித்த வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பில், திட்டம் தொடங்கிய பிறகு அனுமதி வழங்க மத்திய அரசுக்கு அனுமதியில்லை என்றும், அவ்வாறு அனுமதி வழங்குவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு அடிப்படை நியதிகளுக்கு எதிரானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். உச்ச நீதிமன்றத்தை ஒரு பொருட்டாகக் கருதாத மத்திய அரசு, மேற்கண்ட திருத்தத்தை முன்மொழிந்துள்ளது.