புதுச்சேரியில் நடந்திருப்பது ஜனநாயகப் படுகொலை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறியதாவது;
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பு ஏற்ற 2014-ஆம் ஆண்டு முதல், மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைக் கவிழ்த்து வருகின்றது. அருணாசலப் பிரதேசம், கோவா, நாகாலாந்து, கர்நாடகம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில், பெரும்பான்மை பலத்துடன் நடைபெற்ற எதிர்க்கட்சி அரசுகளை, சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கிக் கவிழ்த்து, பாஜக அரசு அமைத்தனர். இத்தகைய கேடு கெட்ட அரசியலுக்கு, ஆளுநர்கள் உறுதுணையாக இருந்து, அரசு அமைப்புச் சட்ட நெறிகளைக் குழிதோண்டிப் புதைத்து வருகின்றனர்.
அந்த வரிசையில், புதுச்சேரி மாநிலத்தில், திமுக ஆதரவுடன் பெரும்பான்மை பலத்துடன் இயங்கிய நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசை, மிகக் கேவலமான முறையில் கவிழ்த்து ஜனநாயகப் படுகொலை நடத்தி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கிரண் பேடி பொறுப்பு ஏற்ற நாள் முதல், நாராயணசாமி அரசுக்கு நாள்தோறும் தொல்லைகள் கொடுத்து வந்தார். மக்கள் ஆட்சிக் கோட்பாட்டைக் குழிதோண்டிப் புதைத்தார். அதனால், புதுச்சேரி மக்களின் கடுங்கோபத்திற்கும், வெறுப்புக்கும் ஆளான கிரண் பேடியை நீக்குவது போல ஒரு நாடகத்தை நடத்தி, சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஆட்சியைக் கவிழ்க்கும் வேலையையும் செய்து முடித்து இருக்கின்றனர்.
இரண்டு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், மக்களைச் சந்தித்து, அவர்களுடைய நம்பிக்கையைப் பெறுவதைக் கைவிட்டு விட்டு, சட்டப்பேரவை உறுப்பினர்களை கட்சி தாவச் செய்து பாஜகவில் சேர்த்துக்கொண்டு, இந்த ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றி இருக்கின்றார்கள். அடிமை அதிமுக கை கட்டி, வாய்பொத்திச் சேவகம் செய்கின்றது. அவர்களுடைய கூட்டணிக்கு, நடைபெற இருக்கின்ற தேர்தலில், மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திருவள்ளுவருக்கு ‘உச்சிக் குடுமி’ - வைகோ கண்டனம்!