இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியா முழுவதும் நாள்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதையும், கொல்லப்படுவதையும் பாஜக அரசும், பிரதமர் மோடியும் வேடிக்கை பார்த்துக்கொண்டு மௌனமாக இருக்கக்கூடாது என்று, எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் உள்ளிட்ட 49 பேர் பிரதமருக்கு வெளிப்படையாக மடல் எழுதினர்.
2019 ஜூன் 23ஆம் தேதி, திரைப்பட இயக்குநர் அபர்ணா சென், வரலாலற்று ஆசிரியர் இராமச்சந்திர குஹா, சமூக ஆர்வலர் ஆசிஷ் நந்தி, ஷியாம் பெனகல், அடூர் கோபால கிருஷ்ணன், அனுராக் கஷ்யப், டாக்டர் பினாயக் சென், சோமிதோரா சட்டர்ஜி, கொங்கணா சென், சுபா முட்கல், அனுபம் ராய், தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் மணிரத்தினம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள், பல்துறை விற்பன்னர்கள் கையெழுத்திட்டுருந்தனர்.
அக்கடிதத்தில், "வட மாநிலங்களில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற முழக்கத்தின் பெயரால், சிறுபான்மை மக்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். தலித் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில், 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று முழக்கத்திற்காகவும், பசு வதை என்கிற பெயராலும் மனித உயிர்கள் பலியாகி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. தலித் மற்றும் சிறுபான்மையினர் தாக்குவோர் மீது, பிணையில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆளும் கட்சி என்பது தேசத்திற்கு இணையானது என்று எந்தப் பொருளும் இல்லை. ஆளும் கட்சிக்கு எதிரான கருத்துகளை, தேசத்திற்கு எதிரானதாகக் கருதக்கூடாது. எதிர்ப்புக் கருத்துகளுக்கும் இடம் தருகின்ற நாடுதான் வலிமையானது. பெரும்பாலான மக்கள் போற்றும் 'ஜெய் ஸ்ரீராம்' என்ற முழக்கத்தை, போர் ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். மேற்கண்ட வன்முறை தாக்குதல்கள் குறித்து, நீங்கள் நாடாளுமன்றத்தில் கண்டனத்தைப் பதிவு செய்தீர்கள். ஆனால், அது மட்டும் போதாது.