சென்னை: எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான தாயகத்தில் மதிமுகவின் 29ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கொடியேற்றினார். அதன் பின், கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு 29வது ஆண்டு விழாவை வைகோ கொண்டாடினார்.
இதற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மதிமுக ஆரம்பிக்கப்பட்டு 29 ஆண்டுகள் ஆகிவிட்டது. எத்தனையோ நெருப்பு ஆறுகளைக் கடந்து இருக்கிறோம். எத்தனையோ காட்டாறுகளில் நீந்தி இருக்கிறோம்.
எத்தனையோ பழிச் சொற்களைத் தாங்கி இருக்கிறோம். ஆனால் எங்களின் இயக்கத்தின் அடித்தளம் என்பது தொண்டர்கள்தான். கோபுர சிற்பங்களால் கோபுரம் நிற்பதில்லை, கோபுரத்தின் அடிப்பகுதிதான் கோபுரத்தையே தாங்கி நிற்கின்றது. அப்படிப்பட்டவர்கள்தான் தொண்டர்கள்" என்றார்.
ஆதீனம் விவகாரத்தில் அரசியல் செய்பவர்கள் அரசியல் செய்யட்டும் - வைகோ தொடர்ந்து பேசிய அவர், "திமுகவோடு கூட்டணி வைத்துக்கொண்டு வெற்றிகரமாகப் பயணிக்கும் இயக்கம்தான் மதிமுக. மதிமுக வரும் காலங்களில் ஊக்கத்தோடு, பொலிவோடும் வளரும். ஆதீனம் விவகாரத்தில் அரசியல் செய்பவர்கள் அரசியல் செய்யட்டும். நாங்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அண்ணாவின் கொள்கைக்கு ஏற்ப அனைத்து மதங்களையும் மதித்து, அனைத்து மதங்களுக்கும் சமமான உரிமை கொடுத்து நாங்கள் நடத்தி வருகிறோம்.
முதலமைச்சர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார், நாங்கள் மதத்தை வைத்து அரசியல் செய்வதில்லை என்று, முதலமைச்சர் கருத்துதான் என்னுடைய கருத்து. அண்ணாமலை தினமும் ஒரு பல்லாக்கை தூக்குவார்" என கூறினார். இதில் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'சஞ்சீவி மலையை சுமந்த அனுமனைப்போல, மோடி இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமக்கத் தயார்' - அண்ணாமலை பேச்சு