சென்னை :மணப்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைப்பது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில், வறுமை கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழை மக்கள் அதிகம் உள்ளனர். ஆற்று நீர், ஊற்று நீர் பாசனம் இல்லாத வறண்ட நிலப்பகுதியாக இருந்தபோதிலும், உடல் உழைப்பை செலுத்திக் குறைந்த அளவில் விவசாயம் செய்து வருகின்றனர்.
மணப்பாறை முறுக்கும், மாட்டு சந்தையும் மாநிலம் முழுமையும் புகழ்பெற்றது. அன்னை தமிழ் மொழி காக்க, ஆதிக்க இந்தியை எதிர்த்து, மணப்பாறை ரயில் நிலையத்தை மாணவர்கள் முற்றுகையிட்டனர். 1928இல், “திருக்குறள் தீபாலங்காரம்“ என்னும் அரிய உரை நூலை தந்த மருங்காபுரி ஜமீன்தாரினி கி.சு.வி.இலட்சுமி அம்மணி வாழ்ந்த ஊர்.
கல்லூரிப் படிப்பிற்குத் திருச்சிக்குச் செல்ல வேண்டிய நிலை
தமிழ் செம்மொழி என அறிவிக்கத் தக்க ஆவணங்களைத் திரட்டி, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு, உதவியாகத் திகழ்ந்த மணவை முஸ்தபா அவர்கள் படித்து வளர்ந்த நகரமான மணப்பாறை பகுதியில் வாழ்கின்ற மக்கள், தொகுதியின் கடைக்கோடி கிராமங்களிலிருந்து கல்லூரிப் படிப்பிற்குத் திருச்சிக்குச் செல்ல வேண்டிய நிலையுள்ளது.
எனவே, மணப்பாறையில் அரசு கலை,அறிவியல் கல்லூரி வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்துப் போராடி வருகின்றனர். கடந்த ஆண்டு கரோனா முடக்கத்தின்போது வீட்டு வாசல்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பெண்கள் கோரிக்கை அட்டையைக் கையில் ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்.