காவிரி ஆற்றின் குறுக்கே 67.14 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையை கட்டுவதற்கு கர்நாடக அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரிவருகிறது.
இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக அரசின் சார்பில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், 'காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டின் கருத்தையோ, அனுமதியையோ பெற வேண்டிய தேவை' இல்லை என்று கூறப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதற்கு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு அனுமதிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், தற்போது கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, அர்க்காவதி ஆகிய அணைகள் நிரம்பி வெள்ளநீர் வெளியேறினால் அந்த நீர் வேகமாக தமிழ்நாட்டின் மேட்டூர் அணைக்கு வந்துசேரும் நிலையில் இருப்பதாகவும் அந்த நீரை மேட்டூருக்கு வரவிடாமல் தடுக்க கர்நாடகா போட்டிருக்கின்ற திட்டம்தான் ‘மேகேதாட்டு'வில் 67.14 டிஎம்சி, கொள்ளளவு கொண்ட அணை கட்டும் திட்டம் எனவும் வைகோ சாடியுள்ளார்.
மேலும், இந்த அணை கட்டப்பட்டால் மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு நீர் கூட வருவதற்கு வழி இல்லாமல் போகும் என்று வேதனை தெரிவித்துள்ள அவர், தமிழ்நாட்டின் உயிர் ஆதாரமான காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒருபோதும் அனுமதி வழங்கக்கூடாது என்றும் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.