சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக மத்திய அரசு ஜனநாயக விரோதமாகச் செயல்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அரசைத் தூக்கி ஏறிய மக்கள் தயாராகி விட்டார்கள். ஒட்டுமொத்த அதிகாரத்தையும் டெல்லியில் மத்தியரசு குவித்து வருகின்றனர். கொடுத்த வாக்குறுதியைக் காற்றிலே பறக்கவிட்டு காஷ்மீர் பிரச்சினையில் மாநில அரசின் உரிமைகளைப் பறித்து வருகின்றனர். மாநிலத்தின் கலாச்சாரம் பண்பாடுகளை பாஜக அழித்து வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்தியா கூட்டணி நெருடல் இல்லாமல் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம். தமிழக அரசைப் பின்பற்ற மற்ற மாநிலங்களும் நினைக்கின்றனர். இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாகத் தமிழகத்தை அறிவிக்க வேண்டும். ஆனால் அதற்கு எதிராக மத்திய அரசு ஒரு வஞ்சனையுடன் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பாஜக வளர்ந்து விட்டது போன்ற மாய தோற்றத்தை ஊடகங்கள் தான் ஏற்படுத்தி வருகிறது. சமுக வலைத்தளங்கள் தான் அரசியல் கட்சிகளுக்கு பலமும் பலவீனமும். இந்தியா கூட்டணியில் யாருக்கும் எந்தவித கருத்து மோதல்களும் இல்லை. பொதுவாகவே பல கட்சிகள் கூட்டணியில் சேரும் போது சில கருத்து மோதல்கள் வரும் அதனைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என அவர் கூறினார்.