இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டபேரவையில் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதை, ஒரு பொருட்டாகவே பாஜக அரசு கருதவில்லை.
‘நீட்’ தேர்வால் மருத்துவக் கல்வி கிடைக்காமல் போனதால் அனிதா, பிரதீபா, ரிதுஸ்ரீ, சைஷ்யா, மோனிஷா உள்ளிட்ட மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர்.
இந்நிலையில் ‘நீட்’ தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் இணையம் மூலம் விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்து மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்தது.
அதன்படி, விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்த மாணவர்களுக்குக் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த விண்ணப்பத்தில் +2 தேர்வு எழுதியபோது அளிக்கப்பட்ட தேர்வு மைய நுழைவுச் சீட்டு (HSC Hall Ticket) கேட்கப்பட்டு இருக்கின்றது.
கடந்த ஆண்டும், அதற்கு முன்பும் +2 தேர்வு எழுதியவர்கள், ‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மீண்டும் முயற்சிக்கும் வகையில் இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு எழுதி இருக்கின்றனர்.