தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 1, 2019, 9:17 AM IST

ETV Bharat / state

மருத்துவர்களைப் பணிநீக்கம் செய்வது ஜனநாயக முறையல்ல - வைகோ சாடல்

சென்னை: நியாயமான கோரிக்கைகளுக்காக போராடுபவர்களை பணியிட மாற்றம் செய்து சில பேரை அச்சுறுத்தினால் மற்றவர்கள் வேலைக்கு வந்துவிடுவார்கள் என நினைப்பது ஜனநாயக முறையல்ல, பாசிச முறை என வைகோ சாடியுள்ளார்.

Vaiko joins the doctor's protest

கடந்த எட்டு நாள்களாக நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை நேற்று சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு ஆதரவு அளித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கிராமப்புற, மலைவாழ், ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் சென்று எந்த வசதிகளையும் எதிர்பார்க்காமல் தங்களைத் தாங்களே துன்பப்படுத்திக்கொண்டு சேவை செய்யும் மருத்துவர்கள் வாழ்வில் உயர்வதற்கு, மருத்துவ மேற்படிப்பு படிப்பதற்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவந்தது. ஆனால், இன்றைக்கு அந்த வாய்ப்பு இல்லை என்பது மிகப்பெரிய சமூகநீதியை அழித்த கொடுமையான செயல்.

அவர்கள் மேற்படிப்பு செல்லக்கூடிய வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவந்து அரசாணை வெளியிட அரசு முயற்சி செய்ய வேண்டும். 2009ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அரசாணையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதில் அரசு பிடிவாதம் காட்டக் கூடாது.

சாகும்வரை பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்ட எட்டு பேரில் ஐந்து பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசின்போக்கு அராஜகமான பாசிச போக்கு. இவர்களை அழைத்துப் பேசி குறைகளைப் போக்குங்கள் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரையும் முதலமைச்சரையும் கேட்டுக்கொள்கிறேன்.

மருத்துவர் போராட்டத்தில் கலந்துகொண்ட வைகோ

பணியிட மாற்றம் என்பது மிரட்டுகிற வேலை. இதுதான் பாசிச போக்கு. நியாயமான கோரிக்கைகளுக்காக போராடுபவர்களை பணியிட மாற்றம் செய்து சில பேரை அச்சுறுத்தினால் மற்றவர்கள் வேலைக்கு வந்துவிடுவார்கள் என நினைப்பது ஜனநாயக முறையல்ல பாசிச முறை.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட மருத்துவர்கள் மீண்டும் அந்த இடத்திலே பணியாற்றுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். பணிக்குத் திரும்பாத மருத்துவர்களின் பணியிடங்களைக் காலி பணியிடங்களாக அறிவிப்பது சர்வாதிகார குரல், எதேச்சதிகார குரல். இந்தப் போக்கை அரசு கைவிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: அதிகாரத்தில் இருப்பதால் மருத்துவர்களை மிரட்டக் கூடாது -சீமான்

ABOUT THE AUTHOR

...view details