தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மதிமுகவை திமுகவுடன் இணைக்க எந்த திட்டமும் இல்லை" - வைகோ முற்றுப்புள்ளி! - மதிமுகவை திமுகவுடன் இணைக்க

மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என அக்கட்சியின் அவைத்தலைவர் துரைசாமி கடிதம் மூலம் வைத்த கோரிக்கைக்கு, "மதிமுகவை திமுகவுடன் இணைக்க எந்த திட்டமும் இல்லை" என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 1, 2023, 6:41 PM IST

"மதிமுகவை திமுகவுடன் இணைக்க எந்த திட்டமும் இல்லை" - வைகோ முற்றுப்புள்ளி

சென்னை: சமீப காலமாக மதிமுகவின் தலைமைக்கும் அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமிக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவிற்கு வயது மூப்பின் காரணமாக செயல்பட முடியாதபட்சத்தில் திடீரென அவரது மகனுக்கு தலைமை நிலையச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இது கட்சியில் இருக்கும் மூத்த நிர்வாகிகளுக்கு விரும்பமில்லை எனக் கூறப்படுகிறது. இதில், முக்கியமாக எதிர்த்தவர் அக்கட்சியின் அவைத்தலைவராக உள்ள துரைசாமி ஆவார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைகோவிற்கு துரைசாமி கடிதம் எழுதியிருந்தார். அதில், “மதிமுகவின் செயல்பாடுகள் சரியில்லாத நிலையில் சென்று கொண்டிருக்கிறது. வாரிசு அரசியலை எதிர்த்து மதிமுக தொடங்கப்பட்டது. ஆனால், இங்கேயே 'வாரிசு அரசியல்' தழைத்தோங்கியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக உங்களுடைய பேச்சை நம்பி ஏமாற்றம் அடைந்ததில் நானும் ஒருவன். இனிவரும் தலைமுறையினரை ஏமாற்றாமல் மதிமுகவை திமுகவுடன் சேர்த்துவிடலாம். இதற்கான வைகோவின் பதில்களுக்கு காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க:மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம்: வைகோவுக்கு அவைத்தலைவர் துரைசாமி கடிதம்!

இந்தநிலையில், சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (மே 1) மே தினம் கொண்டாடிய வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி எழுதிய கடிதத்திற்குப் பதிலளித்த வைகோ, “மதிமுகவை திமுகவுடன் இணைக்க எந்த திட்டமும் இல்லை, நோக்கமும் இல்லை. இரண்டு வருடமாக வராதவர் தற்போது பேசினால், அது நல்ல நோக்கத்தோடு இருக்காது. கட்சியின் 99.9% வைகோவோடு உள்ளனர். பல கஷ்டங்களை மதிமுக கடந்து வந்திருக்கிறது. இதையும் கடந்து செல்வோம்” எனக் கூறினார்.

தொடர்ந்து பொதுக்குழு குறித்து பேசிய வைகோ, “விரைவில் கட்சியின் பொதுக்குழு (MDMK General Committee) நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் 70% கட்சியின் அமைப்பு தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. எந்த ஒரு சிறு சலசலப்பும் இல்லாமல் தேர்தல் நடைபெற்றிருக்கிறது. பலர் ஒன்றும் இல்லாத செய்தியை செய்தியாக்க முயற்சித்தார்கள். அதெல்லாம் ஒன்றும் இல்லாமல் போனது. மதிமுகவின் பொதுக்குழுவிற்குப் பிறகு மிக வேகமாக செயல்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:'தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது' - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details