இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா தீநுண்மி பரவல் காரணமாக பொதுமுடக்கத்தால் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க முடியாத நிலை தொடர்கின்றது.
இந்நிலையில், தனியார் பள்ளிகளும், மழலையர், மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள் பல இணைய வழியில் பாடங்களை நடத்திவருகின்றன. அதே போல கலைக் கல்லூரிகள், தொழிற் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள், இணைய வழி கற்பித்தல் முறையைப் பின்பற்றி வரத் தொடங்கியுள்ளன.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 59 ஆயிரம் பள்ளிகள் இயங்குகின்றன. 1.3 கோடி மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.
பொது முடக்கத்தால் இணைய வழிக் கல்வியை ஊக்குவிக்குமாறு கல்வி நிறுவனங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியது. அதற்கு ஏற்ப ஸ்வயம், பாடசாலா, தீக்ஷா உள்பட பல்வேறு கல்வி சார்ந்த வலைதளங்கள் பொதுப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
மேலும், ஸ்கைப், கூகுள் கிளாஸ், ஜூம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகள் இணைய வகுப்புகளையும் நடத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் இணைய வழி கற்பித்தலுக்கான உள்கட்டமைப்புகளைப் பெற்று இருக்கின்றதா என்பதையும் ஆய்வு நடத்த வேண்டும்.
இணைய வழி கற்பித்தலுக்கு மின் வசதி, இணையத்தளத் தொடர்பு, கணினி, அறிவுத் திறன் பேசி (Smart phone) போன்ற வசதிகள் அனைத்துக் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் கிடைத்திருக்கின்றதா? என்பதையும் பார்க்க வேண்டும்.