சென்னை: தந்தை பெரியார் பிறந்த நாள், இனி சமூக நீதி நாளாக அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்ததற்கு வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் 17, ஆண்டுதோறும் ‘சமூக நீதி நாளாக’ அரசு சார்பில் கொண்டாடப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்ற, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில், பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கேரளாவின் வைக்கம் நகரில் ஈழவ மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடி, தன் மனைவி நாகம்மையார், சகோதரி கண்ணம்மாள் ஆகியோர்களுடன் சிறை சென்று சமூகநீதி காத்த போராளித் தலைவர் தந்தை பெரியார்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு. கல்வி, வேலைவாய்ப்புகளை வழங்கும் சமூகநீதிக் கொள்கை உயர் நீதிமன்றத்தாலும், உச்ச நீதி மன்றத்தாலும் முடக்கப்பட்டபோது, அதனை எதிர்த்து மக்களை அணி திரட்டிப் போராடி, முதன் முதலாக இந்திய அரசு அமைப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்து, சமூக நீதி காத்த மாபெரும் தலைவர் தந்தை பெரியார்.
பெண் அடிமை ஒழிப்பு, தொழிலாளர் மேம்பாடு, சாதி ஒழிந்த சமத்துவ நிலை, சுயமரியாதை ஆகிய சமூக நீதிக் கொள்கைகளுக்காக, விழி மூடுகின்ற வரையிலும், களத்தில் நின்று போராடிய ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியார். அவரது தலை மாணாக்கரான பேரறிஞர் அண்ணா அவர்கள், தமிழ்நாடு அரசையே தந்தை பெரியார் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி மகிழ்ந்தார்.
27.06.1970 அன்று, ஐ.நா. நிறுவனத்தின் யுனெஸ்கோ அமைப்பு, “தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என்றும்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை என்றும்; மூட நம்பிக்கை, பகுத்தறிவு அற்ற சடங்குகளுக்குக் கடும் எதிரி” என்றும் தந்தை பெரியார் அவர்களுக்கு விருது அளித்துப் பாராட்டியது.