இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா எல்லைகள் தொடர்பான பிரச்னை கடந்த ஒரு மாதமாக நீடித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, லடாக் எல்லைப்பகுதியில் சீனா தனது ராணுவத்தை கடந்த மாதம் குவித்தது. அதற்கு பதிலடியாக இந்தியாவும் தனது ராணுவத்தை குவித்ததால் இரு நாடுகளுக்கிடையே போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த பழநி - வைகோ இரங்கல் - ராணுவ வீரர் பழனி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த வைகோ
சென்னை: சீன ராணுவ தாக்குதலில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் பழனியின் மரணத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இருநாட்டு ராணுவ உயர் அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து, எல்லையில் இருக்கும் படைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. லடாக்கிலுள்ள படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கையின்போது நேற்றிரவு (ஜூன் 15) இரு தரப்பு ராணுவத்திற்குமிடையே மோதல் ஏற்பட்டது. கால்வான் பகுதியில் நடைபெற்ற இந்த மோதலில் மூன்று இந்திய வீரர்கள் மரணமடைந்தனர். மேலும், அவர்களில் ஒருவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனி என்பது தெரியவந்துள்ளது. இந்திய ராணுவத்திற்கு பழனி 22 ஆண்டுகளாக சேவையாற்றியுள்ளார்.
பழனியின் மரணத்திற்கு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், லடாக் எல்லையில், சீனப் படைகள் நடத்திய தாக்குதலில், இந்தியப் படை அலுவலர் ஒருவரும், வீரர்கள் இருவரும் உயிரிழந்தனர். அவர்களுள் ஒருவர் தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழநி என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
அன்று, 1962இல் இந்தியா நட்பு உறவை நாடிய சூழலில்தான், இந்தியாவைச் சீனா தாக்கியது. அதேபோல், தற்போதும் நேச உறவை வளர்க்கின்ற நோக்கத்தில்தான், சீனக் குடியரசுத் தலைவரை இந்தியா வரவேற்றது. தமிழ்நாடு சிறப்பான வரவேற்பு அளித்தது. ஆனால், இப்போதும் சீனா தன் கைவரிசையைக் காட்டுகின்றது. கரோனா வைரஸை பரப்பியதான குற்றச்சாட்டுகள் சீனாவை நோக்கி பாய்கின்ற நிலையில், உலகத்தின் கவனத்தைத் திசைதிருப்ப, இத்தகைய நடவடிக்கையில் சீனா இறங்கி இருக்கின்றது.
ஏற்கனவே லடாக் பகுதியில் 37 ஆயிரம் சதுர கிலோமீட்டர் இந்திய நிலப்பரப்பை கைப்பற்றிக் கொண்டு, அக்சாய்சின் எனப் பெயர் சூட்டிக்கொண்ட சீனா, மேலும் நிலத்தை பறிக்க முயல்கின்றது. இந்த வேளையில், நாட்டின் எல்லையை காப்பதற்காக தன் இன்னுயிர் ஈந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு, என்னுடைய கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கின்றேன். தாக்குதல் நடைபெற்ற அன்று காலையிலும் பழநி தனது மனைவியோடு பேசி இருக்கின்றார். அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள்.
22 ஆண்டுகள் பணிபுரிந்த பழநி, இன்னும் ஓராண்டில் ஓய்வு பெற இருந்த நிலையில், நாட்டுக்காகத் தன் உயிரை ஈந்திருக்கின்றார். பழநியின் தம்பியும், இந்தியப் படையில் கடமை ஆற்றி வருகின்றார் என்பது பெருமைக்கு உரியது. வீரச்சகோதரன் பழநிக்கு தலைவணங்கி கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.