தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூடங்குளம் அணு உலை விரிவாக்கத்தை கைவிட வேண்டும் - வைகோ - kudangulam annuulai

சென்னை: 'கூடங்குளம் அணு உலையில் பிரச்னைகள் உள்ளதை இந்திய அரசு ஒப்புக்கொண்டதையடுத்து, அதன் விரிவாக்கத்தை உடனடியாக கைவிட வேண்டும். மேலும்,  சுதந்திரமான குழுவைக் கொண்டு அணு உலை செயல்பாடுகளை ஆராய வேண்டும்' என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Vaiko condemns kudankulam

By

Published : Apr 21, 2019, 8:30 PM IST

Updated : Apr 21, 2019, 9:13 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கூடங்குளம் அணு உலையானது செயல்படத் தொடங்கும் முன்னரே அந்த அணு உலையை அறிவியல் தொழில்நுட்ப ரீதியில் ஆராய்ச்சி செய்து அதில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதை அறிந்த காரணத்தினால்தான் அந்த உலையை செயல்பட அனுமதிக்கக் கூடாது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இடிந்தகரை கிராமத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சார்ந்தவர்களும் நீண்டகாலமாக இரண்டு அணு உலைகளை எதிர்த்துப் போராடிவருகின்றனர்.

அணு உலை செயல்பட ஆரம்பிப்பதற்கு முன்பாக இருந்தே முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டை இந்திய அணுசக்திக் கழகத்தினரும், அணுசக்தித் துறை வல்லுநர்களும் மறுத்து வந்தனர். ஆனால் ஆர்.டி.ஐ., மூலம் பெறப்பட்ட தகவலின்படி, கூடங்குளம் அணு உலை அலகு ஒன்று, 2013ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 47 முறை பழுதாகி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் அணு உலை அலகு இரண்டு, 2017ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 19 முறை பழுதாகி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சியான தகவல் நமக்கு கிடைத்தது.

சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஒரு உலையானது ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று முறை பராமரிப்பிற்காக மட்டும் நிறுத்தப்படும். இதன் மூலமாகவே கூடங்குளம் அணு உலையில் பிரச்னை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த இந்திய அணுசக்திக் கழகத்தின் தலைவரும் அணுசக்தித் துறையின் செயலாளருமான கமலேஷ் நில்கந்த் வியாஸ் கூறுகையில்,

“கூடங்குளம் அணு உலை அடிக்கடி நிறுத்தப்படும் எண்ணிக்கையானது வழக்கத்திற்கு மாறானது. அந்த உலையில் தொடக்க நிலை பிரச்னைகள் உள்ளது. அதை சரிசெய்ய இந்திய அணுமின்சக்தி கழகத்தினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் போராட்டக்காரர்களும், இடிந்தகரை மக்களும் நீண்டகாலமாக முன்வைத்துவரும் குற்றச்சாட்டு உண்மையாகியுள்ளது.

அணுசக்தி கழகத்தின் செயலாளர் கூறியதை கருத்தில் கொண்டு இனியாவது கூடங்குளம் அணு உலை அலகு 1 மற்றும் 2இன் செயல்பாடுகளை ஒரு சுதந்திரமான வல்லுநர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அதுவரை கூடங்குளத்தில் மேற்கொண்டு புதிய உலைகள் அமைக்கும் பணியை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும் அணு உலையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பேரிடர் மேலாண்மை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு மாநில அரசின் கைகளில் உள்ள காரணத்தால் இப்பிரச்னைக்கு முழு கவனம் அளித்து உடனடியாக கூடங்குளத்தில் அணு உலை செயல்பாடுகள் அனைத்தையும் மாநில அரசு நிறுத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Apr 21, 2019, 9:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details