தமிழ்நாட்டில் காவேரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்தாலும், ஏற்கனேவே செயல்பாட்டில் உள்ள ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஹைட்ரோகார்பன் திட்டம் - அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்துசெய்ய வைகோ வலியுறுத்தல் - வைகோ
சென்னை: ஹைட்ரோகார்பன் எடுக்கப் போடப்பட்டுள்ள அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்படவேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயனம் மற்றும் ரசாயனப் பொருள்கள் முதலீட்டு மண்டலம் (Petroleum, Chemicals and Petro Chemicals InvestmentRegion - PCPIR) அமைப்பதற்கு 2017 ஜூலை 19ஆம் தேதி தமிழ்நாடு அரசு குறிப்பாணை (எண்.29) வெளியிட்டது. அதில் கடலூர், நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் உள்ள 57ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடக்கோரி, 2017 ஜூலை 31இல் கடலூரில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காவிரிப் படுகை மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்கவேண்டுமானால், 2018 அக்டோபர் 1ஆம் தேதி மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சார்பில் வேதாந்தா குழுமம் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்களுடன் ஹைட்ரோகார்பன் எடுக்கப் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.