சில தினங்களுக்கு முன் தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்குவதாகக் கூறி அதற்குத் தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. மேலும் அரசு அலுவலர்களின் அனுமதியோடு பொருள்களை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
அரசின் இந்த அறிவிப்பு பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகளின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திமுக, மதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் அவசர கால வழக்குகளை விசாரிக்கும் அமர்வின் முன்பு விசாரணைக்கு வரும் என்று கூறப்பட்டது.
இதில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் ஆகியோருக்கு சில நிபந்தனைகளுடன் நிவாரணப் பொருள்கள் வழங்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.