தமிழ்நாட்டுக்குத் திறக்க வேண்டிய நிலுவைத் தண்ணீரை முழுமையாக அளிக்க வேண்டும் என வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு வெளிவந்த பிறகு நேற்று கர்நாடகா நீர்ப் பாசனத் துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த கோடை மழை இல்லாததாலும், கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதாலும் விவசாயம், குடிநீருக்கு நீர் தேவைப்படுவதாலும் தமிழ்நாட்டிற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீர் எப்படி திறக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், கர்நாடகா அணைகளுக்கு தண்ணீர் வரத்தை அடிப்படையாகக் கொண்டு, தண்ணீர் திறக்க வேண்டும் என்றுதான் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறவில்லை. தென்மேற்கு பருவமழை தொடங்கும்பொழுது கர்நாடக அணைகளுக்கு எதிர்பார்க்கும் நீர் வரத்து இருந்தால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்று, கர்நாடக அரசு தண்ணீர் திறக்கப்போவதில்லை என்பது இதிலிருந்து உறுதியாகத் தெரிகிறது.